புதுடில்லி: அமெரிக்காவின் எப் 35 ரக போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் அறிவித்து இருப்பது, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. விமானம் சேதம் அடைந்துள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தி இருப்பது எப் 35 விமானத்தின் பாதுகாப்பு பற்றிய புதிய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
உலகளவில் பெரும் ராணுவ பலம் கொண்ட நாடு அமெரிக்கா. அதிநவீன போர் தளவாடங்களை தன்னகத்தே கொண்டுள்ள அந்நாட்டின் அதி நவீன போர் விமானம் தான் எப் 35 ரக விமானம். உலகின் சக்திவாய்ந்த போர் விமானம் என்ற பெயருடன் இந்த வகை விமானம் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய ஈரான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த விமானம் தாக்கப்பட்டதாக ஈரான் அறிவித்தது. அமெரிக்காவின் ஆற்றல் வாய்ந்த இது போன்றதொரு போர் விமானத்தை தாக்கிய முதல்நாடு நாங்கள் தான் என்றும் ஈரான் அறிவித்தது.
ஆனால் இந்த விமானம் சேதம் அடைந்ததால் அவசரமாக தரையிறங்கியதாகவும், பைலட்டுகள் பத்திரமாக இருப்பதாகவும், அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு (CENTOM) அறிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலை தளங்களில் வெளியாக உலக நாடுகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த விமானத்தை உலகளவில் மிக குறைந்த எண்ணிக்கையிலான நாடுகள் மட்டுமே தங்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தி வருகின்றன. எப் 35 போர் விமானம் ஒன்றின் மதிப்பு மட்டுமே ரூ.1000 கோடி ரூபாய் ஆகும்.
ஈரான் தாக்கியதாக கூறப்படும் எப் 35 ஸ்டெல்த் (stealth) ரக போர் விமானம் அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இது ஒரு ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகும். ஸ்டெல்த் என்றால் ரேடார் மற்றும் இன்ன பிற கண்காணிப்பு அமைப்புகளால் கண்டறியவே முடியாது. அவ்வாறான ஒரு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு போர் விமானம்.
வேகத்திற்கு பெயர் பெற்றது; செங்குத்தாக தரை இறங்கும் திறன் கொண்டது; தொலைதூர இலக்குகளையும் மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. இதுவரை எந்த நாட்டு விமானத்தாலும் தாக்கப்பட முடியாத எப் 35 என்ற பெருமையை ஈரான் ராணுவம் தகர்த்து விட்டதாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்திய மூத்த விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளதாவது;
அமெரிக்காவின் எப் 35 ரக போர் விமானத்தை தாக்கி, சேதப்படுத்தியாக ஈரான் அறிவித்து இருக்கிறது. உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால். அது பெரும் திருப்பு முனை எனலாம். ஏன் என்றால் இந்த எப் 35 போர் விமானம், உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம்.
எப் 35 விமானத்தை சேதப்படுத்தியதாக கூறுவது அந்நாட்டுக்கு கிடைத்த பெரிய வெற்றி எனலாம். அதே நேரத்தில் இந்த விமானத்தின் தரவுகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு அளித்து உதவி இருக்கலாம்.
இந்த விமானத்தை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று எண்ணும் நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக அதன் தகவல்களை சேகரித்து வைத்திருப்பார்கள். அவர்கள் ஈரானுக்கு விமானத்தை பற்றிய தகவல்களை அளித்து உதவி இருக்கலாம்.
1990ம் ஆண்டுகளில் யுகோஸ்லாவியாவில் இப்படிதான் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது F 117 (1999ம் ஆண்டு யுகோஸ்லாவியா மீதான நேட்டா நடவடிக்கையின் போது மார்ச் 27ம் தேதி அமெரிக்காவின் அதிநவீன 117 நைட்கோர் ஸ்டெல்த் போர் விமானம் செர்பிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது) என்ற அதிநவீன போர் விமானம் தாக்கப்பட்டது.
இவ்வாறு இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக வர்ணிக்கப்படும் எப் 35 விமானம் கூட முழு பாதுகாப்பானதாக இல்லை என்பதையே ஈரானுக்கு எதிரான போர் உணர்த்தி இருக்கிறது.
