மருத்துவக் கல்வித்துறை கடந்த 12 ஆண்டுகளில் வரலாறு காணாத வளர்ச்சி கண்டிருக்கிறது. கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
மருத்துவ கல்வித்துறை
ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது அதன் மருத்துவ கல்வித்துறை ஆகும். வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் புதிய நோய்களின் சவால்களை எதிர்கொள்ள போதுமான எண்ணிக்கையில் டாக்டர்களும், மருத்துவ வல்லுனர்களும் இருப்பது இன்றியமையாதது.
2014-க்கு முந்தைய காலக்கட்டத்தில், இந்தியாவில் எம்.பி.பி.எஸ். (இளங்கலை) மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் பற்றாக்குறை மிகத்தீவிரமாக இருந்தது.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளை நாடுகின்ற கட்டாயச் சூழல் நிலவியது. மேலும், உள்நாட்டில் டாக்டர்-மக்கள் விகிதமும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தரத்தைவிட குறைவாகவே இருந்தது.
12 ஆண்டுகளில்…
இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் (2014 முதல் 2026 வரையில்) மருத்துவ கல்வித்துறையில் கட்டமைப்பு ரீதியான அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதுடன், மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டு மருத்துவக்கல்வி அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது.
அந்த வகையில் 2014-ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்த நிலையில், 2026-ல் 844 ஆக அதிகரித்திருக்கிறது. இது 118.1 சதவீதம் அதிகம்.
இருமடங்குக்கு மேல் அதிகரிப்பு
இளங்கலை எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் 2014-ல் 51 ஆயிரத்து 348 இடங்கள் இருந்த சூழலில், 2026-ல் 1 லட்சத்து 39 ஆயிரத்து 489 ஆக உயர்ந்திருக்கிறது. முதுகலை மருத்துவ படிப்பு இடங்கள் 2014-ல் 31 ஆயிரத்து 185 ஆக இருந்து, இப்போது 86 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் 12 ஆண்டுகளில் 2 மடங்குக்கு மேல் மருத்துவக் கல்லூரிகள், படிப்புகளுக்கான இடங்கள் அதிகரித்திருக்கின்றன.
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி இடங்களின் இந்த கணிசமான உயர்வு, பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவை உள்நாட்டிலேயே நனவாக்குவதுடன், வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைத்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான மற் றும் தரமான மருத்துவ சேவைகள் தடையின்றி கிடைப்பதை இந்த துணிச்சலான கல்வி விரிவாக்கம் உறுதி செய்யும் என்பகில் சந்தேகம் இல்லை.
