மதுரை, கோவைக்கு ‘நோ’ மெட்ரோ… திட்ட அறிக்கையை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு

சென்னையில் பயணிகளுக்கு மெட்ரோ ரயில் என்பது மிகவும் அத்தியாவசியமாகி விட்டது. பெரும்பாலான பயணிகள் போக்குவரத்திற்கு மெட்ரோ ரயிலை தான் தினமும் பயன்படுத்துகின்றனர். சென்னையை தொடர்ந்து,  மதுரை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.

பா.ம.க 2.0: அரசியல் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த ராமதாஸ்… சாதி அடையாளத்தைத் தாண்டி; புதிய பாதையை உருவாக்குவாரா அன்புமணி?

மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவை – மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கியது.

இதையடுத்து, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த நவம்பரில் கோவை- மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.  தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், மதுரை – கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்து திருப்பி அனுப்பியுள்ளது. 

மேலும், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என தமிழ்நாடு அரசுக்கு மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. 

Source link