“டாஸ்மாக் பார்கள் அமைக்கும் விதிகளில் தளர்வு”

டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்கள் தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையில், டாஸ்மாக் மதுபானக் கடை அமைந்துள்ள அதே கட்டிடத்தில் மட்டுமே பார் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. மேலும், பாருக்கான டெண்டர் எடுப்பவர்கள் அந்தக் கட்டிட உரிமையாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று, அதை டாஸ்மாக் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. 

இதனால், குறிப்பிட்ட கட்டிட உரிமையாளரின் ஒப்புதலைப் பெறுபவர்களுக்கு மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில், புதிய விதிகளின்படி டாஸ்மாக் கடையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள எந்தக் கட்டிடத்திலும் பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெண்டர்களில் அதிகமானோர் போட்டியிடும் வாய்ப்பு உருவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய விதிகளின்படி, 100 மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள தகுதியான கட்டிடத்தின் உரிமையாளரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்றால் போதுமானது எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. அதன்பின்னர், சம்பந்தப்பட்ட கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, தகுதியானதாக இருந்தால் அனுமதி வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் நடைபெற உள்ள நிலையில், போட்டியை அதிகரிக்கும் நோக்கில் இந்த விதித் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link