சட்டவிரோத பட்டாசுக் குடோனில் வெ*டிவி*பத்து : இரு தொழிலாளர்களுக்குக் நேர்ந்த சோகம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தகரக் கொட்டகை அமைத்து, எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி சட்டவிரோதமாகப்  பட்டாசு குடோன் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த குடோனில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கடும் அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த விபத்தின் போது பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்ததால், அவர்கள் யார் என்பது உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ராமச்சந்திரன் என்ற தொழிலாளி 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே சமயம் சம்பவ இடத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று வேறு தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெடிவிபத்து தொடர்பாக வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link