அதிமுகவில் சசிகலா இணைந்தால் 2031 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம்- கே.சி.பழனிசாமி – sasikala inclusion to aiadmk strengthen 2031 tamil nadu assembly election victory says kc palanisamy

தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், அதிமுகவின் நிலை குறித்த கேள்விகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் அக்கட்சியில் இருந்து பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இது கட்சியின் கட்டமைப்பை சிதைத்து, அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குமா? இல்லை மீண்டு வருமா? எனக் கேட்கின்றனர். இந்த சூழலில் கே.சி.பழனிசாமியின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள விஸ்வரூபம் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பாராத ஒன்று. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விட்டனர். 10 முதல் 15 சதவீத வாக்குகளை கைப்பற்றுவர் என்று பலரும் கணித்தனர். இதில் ஆட்சி மாற்றத்தை விரும்பியவர்களை காட்டிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பலவீனம் பெரிதாக எதிரொலித்துள்ளது என்கிறார் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி.

தவெகவிற்கு கிடைத்த கடைசி நேர ஆதரவு

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் உடன்பட்டு செயல்படுகிறார்கள் என்ற பிம்பம் கடைசி நேரத்தில் தவெகவிற்கு கூடுதலாக 15 சதவீதத்தை வாரி கொடுத்தது என்கிறார். அதிமுக தற்போது ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஒன்றுபடாமல் வெற்றி பெற முடியாது. எல்லோரும் ஓரணியில் திரள வேண்டும். இன்றைய தேதிக்கு மாற்று கட்சிக்கு போகாமல் இருப்பது சிலர் மட்டுமே. அதில் நான் ஒருவன். மேலும் சசிகலா. எங்கள் அனைவரையும் அரவணைத்து கட்சிக்குள் கொண்டு வந்து, ஒரு தலைமை மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview

கே.சி.பழனிசாமி சொன்ன அரசியல் கணக்கு

மேலும் வலிமையான கட்டமைப்பை உறுதி செய்து வழிநடத்தினால் அடுத்த முறை அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். கே.சி.பழனிசாமியின் பேச்சு தற்போதைய தமிழக அரசியல் சூழலில் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டில் இதுவரை கறாராக இருக்கிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் சரி. பின்பும் சரி. பிரிந்தவர்களை மீண்டும் இணைத்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றார்.

அதிமுகவில் 2026 தேர்தலில் பின்னடைவு

தேர்தலுக்கு முன்பாக கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வேறு வழியின்றி திமுகவில் போய் சேர்ந்தனர். இது டெல்டா மற்றும் தெற்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு பின்னடைவாக மாறியது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், திமுக உடன் அதிமுக சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதாக சீக்ரெட் டீலிங் அரங்கேறியது. ஆனால் கூட்டணி கட்சிகள் உடன்படாததால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இதுபற்றி தகவலறிந்ததும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி, கட்சி கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்ற கூட்டத்தொடரில் தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இது கட்சிக்குள் விரிசலை அதிகப்படுத்தியது.

தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்

திடீரென 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சென்று இணைந்தனர். அதன்பிறகு வரிசையாக கட்சி தாவும் படங்கள் தொடங்கின. மீண்டும் எடப்பாடி பழனிசாமி ஏற்க விரும்பியவர்களுக்கு கூட பழைய பதவிகள் அளிக்கப்படவில்லை. இதனால் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்து பலர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து அதிர்ச்சி அளித்தனர். கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பலர் அதிமுகவை விட்டு வெளியேறிவது அக்கட்சியின் கட்டமைப்பை சிதைக்கக்கூடும் என பலரும் அச்சப்படுகின்றனர்.

அடுத்த ஆட்சி யாருடையது? திமுக vs அதிமுக

ஆனால் இவை அனைத்தும் அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது. பழைய உற்சாகத்துடன் மீண்டு வருவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களின் பார்வையில் ஒருவேளை தவெக மீது அதிருப்தி ஏற்பட்டு 5 ஆண்டுகள் கழித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் திமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்பிருக்கிறது. அதில் அதிமுகவிற்கான இடம் எங்கே இருக்கிறது?

அடுத்து வரும் தேர்தல்களிலும் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறி தான் என்ற குழப்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் அரவணைத்து முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம். இத்தகைய சூழலில் கே.சி.பழனிசாமியின் கருத்து கவனம் பெறுகிறது.

Source link