சுவிட்சர்லாந்து நாட்டின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 43 கிலோ தங்கம் மற்றும் 3,000 கிலோ வெள்ளி அடித்துச் செல்லப்படுவதாக சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்வாடிக் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தங்கம் மற்றும் வெள்ளியின் சந்தை மதிப்பு மட்டும் ஆண்டிற்குச் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 கோடிக்கும் அதிகம் ஆகும்.
ஒரு நாட்டில் 12 உலகம்… அப்ப மக்கள் எந்த டைம் சோன ஃபாலோ பண்ணுவாங்க? காதல் நகரத்தின் மாயாஜாலம்
கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
சுவிஸ் ஃபெடரல் சுற்றுச்சூழல் அலுவலகத்தின் கோரிக்கையின்படி, ஆய்வாளர்கள் நாடு முழுவதும் உள்ள 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் தங்கம் மற்றும் வெள்ளியைத் தவிர, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவப் பயன்பாட்டில் உள்ள அபூர்வ தனிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கடோலினியம் (Gadolinium): 1,070 கிலோ
நியோடைமியம் (Neodymium): 1,500 கிலோ
யிட்டர்பியம் (Ytterbium): 150 கிலோ
இந்தத் தங்கம் கழிவுநீருக்கு எப்படி வருகிறது?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் மூலம் சிறிய அளவிலான தங்கம் மற்றும் வெள்ளி கழிவுநீரில் கலக்கிறது. சுவிட்சர்லாந்தின் ஜூரா (Jura) பகுதியில் உள்ள புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பு ஆலைகளிலிருந்து ரூத்தேனியம், ரோடியம் மற்றும் அதிக அளவிலான தங்கம் கழிவுநீரில் அடித்துச் செல்லப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் & மருத்துவம்: ஸ்கேன் கருவிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டினால் அரிதான மருத்துவத் தனிமங்கள் சாக்கடையில் சேர்கின்றன.
சாக்கடையில் இருந்து தங்கத்தை எடுக்க முடியாதா?
சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து இந்தத் தங்கத்தைப் பிரித்தெடுப்பது பொருளாதார ரீதியாகப் பெரிய லாபத்தைத் தராது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கழிவுநீரில் கலந்திருக்கும் தங்கம் மிகவும் சிறிய அளவிலேயே பரவியுள்ளது. அதை மீட்டெடுக்க ஆகும் செலவு, மீட்டெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.
சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) என்ற பகுதியில் மட்டும் தங்கச் சுத்திகரிப்பு ஆலைகள் அதிகளவில் இருப்பதால், அங்குள்ள கழிவுநீரில் தங்கத்தின் செறிவு அதிகமாக உள்ளது. அங்கு மட்டும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது லாபகரமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
பிற நாடுகளிலும் இது நடக்கிறதா?
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அந்நாட்டின் கழிவுநீரில் ஆண்டிற்குச் சுமார் 13 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்கம் அடித்துச் செல்லப்படுவது தெரியவந்தது. சுவிட்சர்லாந்தை விட அமெரிக்காவின் கழிவுநீர் கட்டமைப்பு மிகப் பெரியது என்பதால் அங்குத் தொகையும் அதிகமாக உள்ளது.
