அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகர் முன் ஆஜராக இ.பி.எஸ்-க்கு பேரவை செயலாளர் கடிதம்

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் அளித்த பதில்கள் மீது மேலதிக விளக்கம் தேவைப்படுவதால், வரும் ஜூலை 30-ம் தேதி சபாநாயகர் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்நேரடி விசாரணையின்போது அ.தி.மு.க சட்டமன்றக் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் சாந்தி, அ.தி.மு.க கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வக் கடிதத்தில், 

கடந்த 13.05.2026 அன்று எடப்பாடி பழனிசாமி அளித்த தகுதிநீக்க மனு தொடர்பாக, 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூடுதல் விளக்கம் கோரப்பட்டது. 1986-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளில் விதி 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் சபாநாயகர் ஏற்கனவே 03.07.2026 அன்று இசக்கி சுப்பையா, 09.07.2026 அன்று சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்:

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அளித்த கருத்துகள், சட்டப்பேரவைச் செயலகக் கடிதங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில், இருதரப்பினரையும் நேரில் அழைத்து மேலும் சில விளக்கங்களைப் பெற பேரவைத் தலைவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, வரும் 30.07.2026 (வியாழக்கிழமை) அன்று பேரவைத் தலைவர் அறையில் நடக்கும் விசாரணையில். சத்தியபாமா முற்பகல் 11.00 மணிக்கும், ஜெயக்குமார் முற்பகல் 11.30 மணிக்கும், மரகதம் குமரவேல் பிற்பகல் 12.00 மணிக்கும், இசக்கி சுப்பையா பிற்பகல் 12.30 மணிக்கும் விசாரிக்கப்பட உள்ளனர். முன்னாள் உறுப்பினர்கள் 4 பேரும் தங்களது விளக்கங்களை அளிக்கும் அந்தச் சமயத்தில், மனுதாரரான எடப்பாடி பழனிசாமியும் நேரில் வருகை தந்து அ.தி.மு.க தரப்பிலான விளக்கங்களை அளிக்குமாறு சட்டப்பேரவைச் செயலாளர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link