ஸ்ரீநகர்: நிலச்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் இமயமலை பகுதியில் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க வழக்கம் போல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 3ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை ஆக. 28ல் நிறைவடைகிறது.
தொடர் நிலச்சரிவுகள், கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக கடந்த 3 நாட்களாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந் நிலையில், சீதோஷ்ண நிலை மாறிவிட்டதால் தற்போது மீண்டும் யாத்திரை தொடங்கி உள்ளது.
ஜம்மு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த 4,474 பக்தர்கள் மீண்டும் புறப்பட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 166 வாகனங்களில் அவர்கள் பயணித்தனர். காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் அடிவார முகாமுக்குச் சென்றனர்.
பாதுகாப்பு மற்றும் யாத்திரை சீராக நடைபெறும் வகையில் அனைத்து யாத்ரீகர்களும் பாதுகாப்பு நடைமுறைகளையும், அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளையும் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
