அப்போது நயினார் நாகேந்திரன், “ஒரு விஷயம் விஷயம் இந்த மேடை எவ்வளவு அழகா இருக்கிறது. மாப்பிள்ளை சீமான் உள்பட எல்லாரும் இங்கே இருக்கிறார்கள். ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னால் அந்த மேடை இதே மாதிரி இருந்தால் நிலைமை என்ன ஆயிருக்கும் தமிழ்நாடு. அன்பு மாப்பிள்ளை செந்தமிழன் சீமான் அவர்களே…” எனக் குறிப்பிட்டுப் பேசுகையில், “எனக்கும் சரத்குமார் அவர்களுக்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உள்ளது. அவர் நான் அதிமுக அமைச்சராக இருந்த காலத்திலும், பின்னர் எதிர்க்கட்சியில் இருந்த காலத்திலும் அனைவரையும் சமமாகவே பார்த்தவர். அதனால்தான் அவரை ‘சமத்துவ நாயகன்’ என்று அழைக்கிறார்கள். தொலைக்காட்சியில் பார்த்திருப்போம் ஒரு ரசிகரின் மகளைப் படிக்க வைத்து, இன்று அவருடனேயே பணியாற்றும் அளவிற்கு உதவி செய்துள்ளார். இது ஒன்று, இரண்டு அல்ல; நூற்றுக்கணக்கானோருக்கு அவர் இதுபோன்ற உதவிகளைச் செய்திருக்கிறார்.
ஆனால், இன்றைக்குச் சிலர் எழுத்து எடுப்பிலேயே முதலமைச்சராக வந்துவிடுகிறார்கள். ஆனால் முதலமைச்சராக இருப்பதற்கான முழு தகுதியும் அண்ணன் சரத்குமாருக்கு இருக்கிறது. நான் புகழ்வதற்காக இதைச் சொல்லவில்லை. சில நேரங்களில் இறைவன் யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அதற்குப் பதிலாக வைக்கக்கூடாத இடத்தில் சிலரை வைத்துவிடுகிறார். இது கலிகாலம்; அதனால்தான் இப்படி நடக்கிறது. இந்த நாட்டிற்காகவும், தமிழுக்காகவும், தமிழ் ஈழத்திற்காகவும் சீமான் பேசிய வார்த்தைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஆனால் அவற்றைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்களா? தமிழ் இனத்திற்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.
