சென்னை: ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இவர்கள் இருவரும் நிபந்தனை முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.
நீதிமன்றம் உத்தரவுப்படி, காலை, மாலை என இருவேளையிலும் திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும். அதன்படி முதல்நாளான நேற்று செந்தில் பாலாஜி, அசோக்குமார் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு ஆஜராகி கையெழுத்திட்டனர்
இருவரிடமும், கைப்பற்றப்பட்ட ஆடியோ பதிவுகள், வாட்ஸ் அப் உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்து 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந் நிலையில் இன்று (ஜூலை 26) 2வது நாளாக திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார்.
அவரிடம் ஒன்றரை மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்னர், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர்.
விசாரணையின் பாதியில் உள்ளது. விசாரணை முடியட்டும், இன்றைக்கு எதுவும் வேண்டாம். பாதியில் சொன்னால் நன்றாக இருக்காது. விசாரணை முடியட்டும், நடந்ததை நான் அனைத்தையும் சொல்கிறேன் என்று கூறியபடி செந்தில் பாலாஜி புறப்பட்டுச் சென்றார்.
