ஏர் இந்தியா' நிர்வாகத்தின் அலட்சியத்தால் 8 மணிநேரம் வீணாக பறந்த பயணிகள்

புதுடில்லி; டில்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு பயணியருடன் சென்ற, ‘ஏர் இந்தியா’ விமானம், போக்குவரத்துக்கான உரிய அனுமதி பெறாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சீன வான்வெளியை கடந்து சென்ற அந்த விமானம், 8 மணி நேர பயணத்திற்கு பின் மீண்டும் டில்லிக்கு திரும்பியது. இதனால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

டில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகருக்கு ஏர் இந்தியாவின், ‘ஏஐ – 185’ என்ற விமானம் பயணியருடன் நேற்று மார்ச் 19 காலை 11:34 மணிக்கு புறப்பட்டது.

தவறுதலாக சென்றது

எனினும், அந்த விமானம் சீன வான்வெளியான குன்மிங் பகுதி அருகே சென்றபோது, கனடாவில் தரையிறங்குவதற்குரிய அனுமதி பெறாதது தெரியவந்தது. அந்நாட்டிற்கு, ஏர் இந்தியாவின் ‘போயிங் 777 – 300 இஆர்’ ரக விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பறந்து கொண்டிருந்ததோ, ‘போயிங் 777 – 200 எல்ஆர்’ வகை விமானம்.

ஒவ்வொரு நாடும் விமானங்கள் தரையிறங்க வழங்கும் அனுமதிகள் மாறக்கூடியவை. சில அனுமதிகள், விமான நிறுவனம் முழுமைக்கும் வழங்கப்படுகின்றன. மற்றவை, குறிப்பிட்ட விமான வகைகளுக்கோ அல்லது தனிப்பட்ட விமானங்களின் பதிவு எண் அடிப்படையில் பிரத்யேகமாக வழங்கப்படுகின்றன.

இதன்படி, சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானம், கனடா நாட்டிற்கு தவறுதலாக அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சீன வான்வெளி பகுதியான குன்மிங்கில் இருந்து டில்லி விமான நிலையத்திற்கு நேற்று மீண்டும் திரும்பியது. மொத்தம், 7 மணி நேரம் 54 நிமிடங்கள் பயணித்த அந்த விமானம், புறப்பட்ட இடத்திலேயே பத்திரமாக தரையிறங்கியது.வருந்துகிறோம்

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், ‘கனடா சென்ற விமானம், மீண்டும் டில்லிக்கு தரையிறங்கியதற்கு நிர்வாக ரீதியிலான சிக்கல் தான் காரணம். இந்த முடிவு, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவே எடுக்கப்பட்டது. இதனால், பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என, குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, மாற்று விமானம் மூலம் கனடாவின் வான்கூவருக்கு பாதிக்கப்பட்ட பயணியர் அனைவரும் நேற்று புறப்பட்டதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link