நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தினர்.
இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், அது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை நேற்று (25-07-26) ராஜினாமா செய்தார். இதையடுத்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி – மத்திய அமைச்சர்கள் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் விடுத்த இரண்டு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்பாதாக மத்திய அமைச்சர்களான ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் தெரிவித்தனர். மத்திய அரசு கோரிக்கையைத் தொடர்ந்து, தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இருப்பினும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் இணைந்து இடதுசாரி அமைப்புகளான மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்தாலும் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஏ.ஐ.எஸ்.எஃப் (AISF) மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப் (AIYF) ஆகிய மாணவர் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (26-07-26) சென்னை சைதாப்பேட்டையில் ஏ.ஐ.எஸ்.எஃப் (AISF) மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப் (AIYF) மாணவர் அமைப்பினர் நீர் தேர்வை ரத்து செய்யக் கோரி பதாகைகள் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து முன்னேறிச் செல்ல முயன்ற மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர் அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கி காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
