“எங்க மூணு பேருக்கும் இவர் தான் வேணும்…” ஒரே நபரை திருமணம் செய்த 3 சகோதரிகள்!

ஒரே நபரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாக சகோதரிகள் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த திருமணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஹசன்பூர் அருகே உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர்களான 20 வயதான சரோஜ், 19 வயதான சாவித்ரி மற்றும் 18 வயதான சந்தோஷ் ஆகிய மூன்று சகோதரிகள், ஜூலை 17-ஆம் தேதி சாமுண்டா மாதா கோவிலில் தங்களுடன் பணியாற்றி வந்த கேமராமேன் விகாஸை திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து பரவலாக பகிரப்பட்டு, பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை கிளப்பியது.

வெளியான காட்சிகளில், திருமண சடங்குகளுக்குப் பிறகு விகாஸ் மூன்று பேரின் நெற்றியிலும் குங்குமம் வைத்திருப்பது இடம்பெற்றிருந்தது. இந்த திருமணத்தில் இரு குடும்பங்களும் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கிய சகோதரிகள், சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்ததால் பிரிந்து வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், குடும்பத்தினர் தனித்தனியாக திருமணம் செய்து வைக்க திட்டமிட்டதை அறிந்தபோது மனவேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இறுதியில், ஒரே நபரை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே ஒன்றாக வாழ முடியும் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

விகாஸும் இதுகுறித்து, அவர்களின் விருப்பத்தையும் உணர்வுகளையும் மதித்து இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை காவல்துறைக்கு எந்த அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என்றும், பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சட்டரீதியாக நடவடிக்கை தேவைப்படும் வகையில் ஏதேனும் புகார் கிடைத்தாலோ அல்லது குற்றம் உறுதி செய்யப்பட்டாலோ, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Also Read: பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்; வீடியோ வெளியிட்ட நர்ஸ்…

Source link