கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதல் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரிஷிகாந்தா சிங் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் கடந்த ஜூலை 23ம் தேதி துவங்கிய காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
இன்று நடந்த பளு தூக்குதல் போட்டியின் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த ரிஷிகாந்தா சிங் பங்கேற்றார். இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் முதல் இடத்தில் இருந்த அவர், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கடைசி இரண்டு முயற்சிகளில் தோல்வியடைந்தார். இதனால், 143 கிலோ மட்டுமே அவரால் தூக்க முடிந்தது. இறுதியில் 121 கிலோ மற்றும் 143 கிலோ என மொத்தம் 264 கிலோ எடையை மட்டுமே தூக்கினார். இதனால், அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
மலேசியாவின் முகமது அனிக் கஸ்தான் (273 கிலோ) தங்கமும், கென்யாவின் ஜோஷூவா அமுங்கா (260 கிலோ) வெண்கலமும் வென்றனர்.
பாரா காமன்வெல்த் போட்டியைத் தவிர்த்து, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ரிஷிகாந்தா இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
