கங்கை நதிக்கரையில் கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், நோன்பு துறக்கும் போது சிக்கன் பிரியாணி சாப்பிட்டதற்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு சனிக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவன பல்கலை.யில் நடந்த நீதிபதி ஜி.பி. சிங் 4-வது நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், சிக்கன் பிரியாணி சாப்பிடுவது நிச்சயம் குற்றமாகாது. அது ஒரு குற்றமாக இருக்கவே முடியாது… ஆனால், அந்த ஒரு காரணத்திற்காக இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சுமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி உஜ்ஜல் புயான், தற்காலத்தில் சாதாரண எதிர்ப்புக் குரல்கள் கூடக் குற்றவியல் நடவடிக்கைகளாக மாற்றப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஒருவரது கருத்துகளை வெளிப்படுத்துவதும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ஆகும். விவாதமும், கருத்து வேறுபாடுகளுமே ஜனநாயகத்தின் உயிர்நாடி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இங்குச் சாதாரண செயல்பாடுகள் கூடக் குற்றமயமாக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
சுற்றுச்சூழல் போராட்டங்கள் மற்றும் மாணவர் போராட்டங்களைக் குறிப்பிட்ட அவர், சுற்றுச்சூழல் சீர்கேடு என்பது நிதர்சனமான உண்மை. அதை எதிர்த்து குரல் கொடுக்க வரும் மக்களை, ஏதோ குற்றவாளிகளை போலத் துரத்துகிறார்கள். பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் கைது செய்யப்பட்டு, 30 முதல் 40 நாட்கள் வரை பிணை கிடைக்காமல் தவிக்கின்றனர் என்றார். மேலும், அவ்வாறு கைது செய்யப்படும் மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதால், அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் நிறைந்த பெயில் நிபந்தனைகள் மூலம் நீதிமன்றங்களே எதிர்ப்புக் குரல்களை முடக்குகின்றனவா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்த விவகாரங்கள் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. நீதிமன்றங்கள் பிணை வழங்கினாலும், பல நேரங்களில் அது மிகவும் தாமதமாகவே கிடைக்கிறது. ஆனால், பிணை வழங்கும் போது விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளே மிகப்பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற கட்டுப்பாடுகளின் மூலம், குடிமக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யக் கூடாது என்று நீதிமன்றங்கள் மறைமுகமாக அவர்களைத் தடுக்கிறதா? என்று நீதிபதி வினவினார்.
தண்டனை நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் ‘புல்டோசர் நீதிக்கு’ எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குறிப்பிட்ட அவர், அந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், “2 ஆண்டுகள் தாமதமாக வந்துள்ளது” என்றார். மேலும், பிணையில் வெளிவரும் நபர்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க கூடாது அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவிட கூடாது என விதிக்கப்படும் நிபந்தனை, அவர்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் கடுமையாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பம்பாய் உயர் நீதிமன்றம் அனுமதிமறுத்த விமர்சித்த நீதிபதி, நீதிமன்றத்தின் அந்த கருத்துகள் மிகவும் வேடிக்கையாக இருந்ததாகத் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பிரச்னைகளை பற்றிப் பேசாமல் காசாவில் நடக்கும் நிகழ்வுகளுக்காக ஏன் போராட வேண்டும் என மனுதாரர்களிடம் கேட்கப்பட்டது. ஆனால், இந்தியா பாரம்பரியமாகவே பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, அதன் தூதரகத்திற்கு இடம் அளித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலுக்குச் செல்வது குறித்துப் பேசிய அவர், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர், நீதித்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவே நான் மாநிலங்களவைக்குச் செல்கிறேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது… இதில் அடிப்படை பிழை உள்ளது என்று விமர்சித்தார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் கேள்வி கேட்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த நீதிபதி உஜ்ஜல் புயான், தீர்ப்புகள் வழங்கப்பட்ட பிறகு அவை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றார். ஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பது அதை வழங்கிய நீதிபதியை விமர்சிப்பதாகாது என்றும் தெளிவுபடுத்தினார். நீதித்துறையின் நம்பகத்தன்மை என்பது சுய மதிப்பீட்டில் இல்லை, மாறாக பொதுமக்களின் நம்பிக்கையில்தான் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், எனது தலைமுறையை விடப் புதிய தலைமுறை வழக்கறிஞர்களும் சட்ட மாணவர்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் பெரிய நம்பிக்கையைக் காண்கிறேன் என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
