நமது நிருபர்
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முன்வருமாறு சமாஜ்வாதி கட்சிக்கு, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் முடிந்த பின் புலம்பி தீர்ப்பதில் பலன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இதில், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் ஆளும் பா.ஜ., காய்களை நகர்த்தி வருகிறது.
அதே போல், முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்காக வியூகம் அமைத்து வருகின்றன.
இந்நிலையில், மொராதாபாதில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. பா.ஜ.,வை வீழ்த்த சமாஜ்வாதியுடன் கைகோர்க்க தயாராக இருக்கிறேன். கூட்டணி வைத்துக் கொள்ளவும் எந்த ஆட்சேபமும் இல்லை. கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இதுவே தக்க சமயம். இந்த வாய்ப்பை விட்டுவிட்டு, தேர்தல் முடிந்த பின், புலம்பி தீர்ப்பதில் எந்த பலனும் இல்லை.
உத்தர பிரதேச தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடுவதால், சமாஜ்வாதியின் ஓட்டுகள் பிரிவதாக நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். எனவே, உங்களுடன் சேர்ந்து தேர்தலில் களம் காண நான் தயாராகவே இருக்கிறேன்.
எங்கள் போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. சுயமரியாதை மற்றும் நீதிக்கானது. அகிலேஷ் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால், அவருக்கு முன்பாக நாங்களும் சரிசமமாக அமர்ந்து சம உரிமை மற்றும் நீதி குறித்து பேசுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் கூட்டணி குறித்து ஒவைசி விடுத்த இந்த அழைப்பு தொடர்பாக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறுகையில், ”யார் பெரிய அண்ணன் என்ற போட்டியில் ஈடுபட்டு வந்த அகிலேஷ் யாதவும், ஒவைசியும் தற்போது ஓட்டு வங்கி அரசியலுக்காக ஒன்றாக கைகோர்க்க பார்க்கின்றனர். இந்த நட்பு கோரிக்கை தாஜா அரசியலை தான் சுட்டிக்காட்டுகிறது. இவர்கள் இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்,” என்றார்.
