நெருக்கடியை சமாளிக்கும் திறமையாளர்: தர்மேந்திர பிரதான் விலகலுக்குப் பின் பிரகலாத் ஜோஷியை பா.ஜ.க தேர்வு செய்தது ஏன்?

எழுதியவர்கள்: அக்ரம் எம், ஹரிகாஷன் சர்மா

தேசியத் தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திலிருந்து எழுந்த அதிர்வுகள் எட்டியபோது, பிரகலாத் ஜோஷி அதிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள கர்நாடகாவின் தார்வாடில் இருந்தார். சில மணி நேரங்களுக்கு முன்பு தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தலைமை அவருக்குத் தெரிவித்தது. ஹூப்ளியில் இருந்து இரவு 7.30 மணி விமானத்தில் டெல்லிக்கு விரைந்த ஜோஷி, ஞாயிற்றுக்கிழமையன்று அமைச்சகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆங்கிலத்தில் படிக்க:

“இன்று, நான் மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி-க்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணிவுடனும், ஆழந்த கடமை உணர்வுடனும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று ஜோஷி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகங்களின் பொறுப்பில் இருக்கும் இந்த மத்திய அமைச்சருக்கு, இது ஒரு தற்காலிக ஏற்பாடாக இருந்தபோதிலும், இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாயத்தைக் குறிக்கிறது மற்றும் கட்சியும் அரசாங்கமும் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. பொறுப்பேற்ற பிறகு, வினாத்தாள் கசிவு சர்ச்சையின் மையத்தில் இருக்கும் தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ) அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் உடனடி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

தார்வாடைச் சேர்ந்தவர்

63 வயதான ஜோஷி கர்நாடக பா.ஜ.க-வின் மூத்த தலைவர் ஆவார், அவரது அரசியல் வாழ்க்கை சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்ததன் மூலம் தொடங்கியது. 1994-ம் ஆண்டு ஹூப்ளியில் நடந்த ஈத்கா மைதானப் போராட்டத்தைத் தொடர்ந்து ஒரே இரவில் பிரபலமடைந்த பல பா.ஜ.க தலைவர்களில் ஜோஷியும் ஒருவர். ஊரடங்கு உத்தரவை மீறி, பா.ஜ.க தலைவர் உமா பாரதி தலைமையிலான போராட்டக்காரர்கள் குழு ஒன்று ஈத்கா மைதானத்தில் வலுக்கட்டாயமாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க முயன்றபோது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவின் “மினி அயோத்தி” என்று அழைக்கப்பட்ட இந்தச் சம்பவம், ஹூப்ளி நகரில் மதக்கலவரங்களுக்கு வழிவகுத்ததுடன், நீண்ட காலத்தில் வட கர்நாடகாவில் பா.ஜ.க தனது தடத்தை விரிவாக்க உதவியது; இது மாநிலத்தில் கட்சி ஆட்சிக்கு வர ஒரு முக்கிய படியாக அமைந்தது. ஜோஷி 1995 முதல் 1998 வரை பாஜகவின் தார்வாட் மாவட்டத் தலைவராகவும், 1998 முதல் 2003 வரை அதே மாவட்டத்தின் பா.ஜ.க பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.

கர்நாடக பா.ஜ.க-வின் முக்கியமான பிராமணத் தலைவர்களில் ஒருவரான அவருக்கு, அடுத்த ஆண்டில் தார்வாட் வடக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதே இல்லை. 2008-ம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தார்வாட் வடக்குத் தொகுதி இல்லாமலானதால், ஜோஷி நாடாளுமன்றத்தில் தார்வாட் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

கர்நாடகாவில் பா.ஜ.க-வின் எழுச்சிக்கு முக்கியக் காரண கர்த்தாவாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் குமாருக்கு ஜோஷி நெருக்கமாக இருந்தார்; மேலும் 2013-ல் முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து கட்சி மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தபோது, மாநில அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இவர் அமர்த்தப்பட்டார். அவர் 2016 வரை அப்பதவியில் நீடித்தார்.

2018-ல் அனந்த் குமார் மறைந்தது முதலே, டெல்லியில் மாநில பாஜகவின் முதன்மைப் புள்ளியாக ஜோஷி மாறினார். 2019-ம் ஆண்டில், அவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். கர்நாடக அரசியலில் அவரது தொடர்ச்சியான முக்கியத்துவம் 2021-ல் தெளிவாகத் தெரிந்தது; முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹூப்ளி, பெங்களூரு மற்றும் புதுடெல்லியில் நடந்த ஜோஷியின் மகளின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கர்நாடகாவில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கான மதிய உணவுத் திட்டத்துடனும் அவர் தொடர்பில் உள்ளார்.

மோடி 3.0 அரசில்

பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சகம், மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் பொறுப்புகள் ஜோஷியிடம் ஒப்படைக்கப்பட்டன. உணவுத் துறை அமைச்சராக, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013-ன் விதிகளின்படி, நாட்டின் மிகப்பெரிய நலத்திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவை நிர்வகிப்பதில் அவர் ஈடுபட்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சராக, மோடி அரசின் மிகவும் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘பிஎம் சூர்ய கர் யோஜனா’வை செயல்படுத்துவதற்கு அவர் பொறுப்பாக இருந்துள்ளார்.

நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கண்காணிப்பதிலும், விநியோகத்தை நிர்வகிப்பதிலும் ஜோஷிக்கு முக்கியப் பங்கு உண்டு. அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை மதிப்பீடு செய்து கொள்கை முடிவுகளைப் பரிந்துரைக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அமைச்சர்களிடை குழுவின் உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

கல்வி அமைச்சகத்தின் பொறுப்பு அவருக்கு வழங்கப்படுவதற்கு முன், பல வருட உள்கட்சிப் பூசல்களுக்குப் பிறகு மாநில பா.ஜ.க-வைச் சீரமைக்க, கட்சியை மீண்டும் வழிநடத்த ஜோஷியை கர்நாடகாவுக்கே திரும்ப அனுப்பலாம் என்று அதிகார மையங்களில் ஊகங்கள் நிலவின. சமீபத்திய மாநிலங்களவைத் தேர்தலின் போது நடந்த மாறுபட்ட வாக்குப்பதிவு மற்றும் மாநில பா.ஜ.க தலைவர்களுக்கு இடையிலான தொடர் சண்டைகள், எல்லோரையும் கட்டுப்படுத்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த தளத்தில் எதிர்க்க தற்போதைய தலைமையின் திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. ஹரியானா மற்றும் டெல்லிக்கு இடையே உள்ள சம்பு எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் கவலைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றியதன் மூலம், 2024-ம் ஆண்டில் ஜோஷியின் பிரச்சனை தீர்க்கும் திறன் வெளிப்பட்டது.

2023-ல், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு, ஜோஷியின் தற்போதைய மத்திய அமைச்சரவை சகாவும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி. குமாரசாமி, அவரைப் போன்ற “பிளவுபடுத்தும் பிராமணத் தலைவர்கள்” மற்றும் தெற்கு கர்நாடகாவைச் சேர்ந்த தலைவர்கள் என இருசாராரையும் வேறுபடுத்திக் காட்டி ஜோஷியைச் சாடினார். 2023 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலில் கட்சி வெற்றி பெற்றால் ஜோஷி முதலமைச்சராக்கப்படலாம் என்ற ஊகங்கள் இருந்தபோது இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.

Source link