21ம் நூற்றாண்டுக்கான உலகத்தை தீர்மானிக்கும் இந்திய இளைஞர்கள்: பிரதமர் மோடி

புதுடில்லி: 21ம் நூற்றாண்டுக்கான உலகத்தை இந்திய இளைஞர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வளர்ந்த கிராமம் திட்டம் 2026 திட்டத்தில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில், நாடு முழுதும் 245 மாவட்டங்களை சேர்ந்த ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் பலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிரதமர் உடன் பகிர்ந்து கொண்டனர்.

தனித்துவம்

இதன் பிறகு பிரதமர் மோடி பேசியாதவது: நமது எல்லைப்புற கிராமங்களில் வளர்ச்சியின் மீதான வேட்கை மற்றும் தேசபக்தி உணர்வு ஆகியவற்றின் ஒரு தனித்துவமான இணைப்பை நாம் உணர முடியும். பல நேரங்களில் அங்கு வசிக்கும் மக்களுக்கு, ‘ தங்களை விட நாடே முக்கியமானது’ என்று தோன்றும். நாடே முக்கியமானது. வசதிகள் அதற்கு அடுத்து வருகின்றன. எல்லைப்புறக் கிராமங்களில் இருந்து கிடைக்கும் ஒரு தனித்துவமான உணர்வு இதுதான்.

சிறந்த உதாரணம்

நாட்டின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே மேரா யுவா பாரத் திட்டத்தின் நோக்கம். மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உணவுபழக்க வழக்கங்கள், தொழில், கலாசாரம் மற்றும் வாழ்வியல் நடைமுறைகள் ஆகியவற்றை இளைஞர்கள் அனுபவித்து அதில் உள்ள சவால்களை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினோம். முன்பு அறிமுகம் இல்லாத கிராமங்களில் நீங்கள் ஒரு வாரம் கழித்தீர்கள். ஒரே பாரதம், உன்னத பாரதம் எனும் உணர்வுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்கக்கூடாது.

வளர்ந்த கிராமம்

பிரதமர் ஆன பிறகும், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் எல்லைப்புற கிராமங்களுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது இல்லை. கார்கில் சுற்றி உள்ள கிராமங்களுக்கு சென்றிருப்பீர்கள் . நமது கதாநாயகர்கள் எத்தகைய சவாலான சூழலில் வெற்றிக் கொடி நாட்டினார்கள் என்பதையும் பார்த்து இருப்பீர்கள். வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமே வளர்ச்சி அடைந்த கிராமங்கள்தான். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம் நடக்கிறது . அதில் நீங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றீர்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தக் கிராமங்கள், வெறும் கடைசி கிராமங்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அவற்றின் நிலை குறித்து எவரும் கவலைப்படாமல் விடப்பட்டு இருந்தன. சாலைகள், மின்சாரம், குடிநீர், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை. ஆனாலும், எல்லைப்புற கிராம மக்களின் தேசபக்தியில் ஒரு போதும் குன்றவில்லை. சிறிதளவும் கூட மாறவில்லை.

தலைவிதி

இளம் இந்தியர்கள்தான் 21ம் நூற்றாண்டின் உலகத்தை வடிவமைக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை. இதுவே இந்திய இளைஞர்களின் உண்மையான தலைவிதி. வளர்ந்த பாரதம் திட்டத்தின் உந்துசக்தியாக இளைஞர்கள் திகழ்கின்றனர். அதன் மிகப்பெரிய பயனாளிகளாகவும் உள்ளனர். இளைஞர்களின் சக்தி சவால்களிலும், தீர்வுகளிலும் நேரடியாக ஈடுபட்டால், எதிர்காலம் நிச்சயம் பிரகாசிக்கும். இவ்வாறு பிரதமர் மோடிபேசினார்.

Source link