தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என முக்கியமான ஒரு வாக்குறுதியை தவெக கொடுத்துள்ளது. தற்காலிகமாக ஆசிரியர்கள் பணிபுரிந்த காலத்திற்கு, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் அதாவது சமவேலைக்கு சமஊதியம் பெற்றுத் தரப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது.
எனவே, தவெக தேர்தல் வாக்குறுதியில் பணி நிரந்தரம் செய்ய குறிப்பிட்ட 5 ஆண்டுகள் என்பதையும்விட, மூன்று மடங்கு அதாவது 15 ஆண்டுகளை கடந்து தற்காலிகமாகப் பணிபுரிகின்ற 11,773 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் எழுந்து வருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் அரசின் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் அதிமுக ஆட்சியில் 2011-2012ஆம் கல்வியாண்டில் ரூ. 5,000 தொகுப்பூதிய சம்பளத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களில் மரணம், பணி ஓய்வு என சுமார் 5,000 (4,776) காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சுமார் 12 ஆயிரம் (11,773) பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் உடற்கல்வி (3,843), ஓவியம் (3,721), கணினி அறிவியல் (2,033), தையல் (1,584), இசை (329), தோட்டக்கலை (22), கட்டிடக்கலை (49), வாழ்க்கைக் கல்வி (192) என இந்த எட்டு பாடப் பிரிவுகளில் மொத்தம் பதினோரு ஆயிரத்து எழுநூற்று எழுபத்து மூன்று பேர் உள்ளனர். இவர்களுக்கு சம்பள உயர்வு முதலில் 2014ஆம் ஆண்டில் 2,000 ரூபாய், இதை அடுத்து 2017ஆம் ஆண்டில் 700 ரூபாய், இதை அடுத்து 2021 ஆம் ஆண்டில் 2,300 ரூபாய் என படிப்படியாக உயர்த்தியதால் சம்பளம் 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக தேர்தலில் கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் 2024ஆம் ஆண்டில் உதவித்தொகையாக 2,500 ரூபாய், இதை அடுத்து 2026ஆம் ஆண்டில் 2,500 ரூபாய் வழங்கியதால் தற்போது உதவித்தொகை மட்டும் மொத்தம் ரூபாய் 5,000 கிடைக்கிறது. இதனால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 15,000 ரூபாய் கிடைக்கிறது. வேலைக்கு சேர்ந்த 2012ஆம் ஆண்டில் இருந்து 2025ஆம் ஆண்டு வரை 14 ஆண்டுகளாக மே மாதம் சம்பளம் மறுக்கப்பட்டு தற்போது 2026ஆம் ஆண்டிற்கு மட்டும் மே மாதம் சிறப்பு உதவித்தொகை என்ற பெயரில் 10,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் சிறப்பாசிரியர்களாக காலமுறை சம்பளத்தில் நியமித்தவர்களுக்கு ரூ. 20,600 என்ற அடிப்படை சம்பளத்துடன் தற்போது ஒரு லட்சம் சம்பளம் கிடைக்கிறது. எனவே, ஒரே பாடங்களில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும், சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் ரூ. 20,600 என்ற அடிப்படை சம்பளத்துடன் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போதைய ரூ. 15,000 சம்பளம் தொகுப்பூதியமாக வழங்க ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் ஆகிறது. இதனை மாற்றி சிறப்பாசிரியர்களுக்கான காலமுறை சம்பளத்தை, பகுதி நேர ஆசிரியர்களுக்கும் வழங்க அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் ஆகும்.
எனவே, காலமுறை சம்பளம் வழங்க தேவைப்படும் நிதியை இந்த பட்ஜெட்டில் முதல்வர் ஒதுக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதியோடு ஒரே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களையும், பகுதி நேர ஆசிரியர்களையும் சமநீதியோடு நடத்த சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தற்போது 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு TRB ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக நியமிப்பதற்கு பதிலாக, அதே உடற்கல்வி பாடத்தில் 15 ஆண்டுகளை கடந்து தற்காலிகமாக பணிபுரிகின்ற 3,843 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதைப் போலவே, ஓவியம், கணினிஅறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி பாடங்களில் 15 ஆண்டுகளை கடந்தும் தற்காலிகமாகப் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்த பிறகே, புதிய நியமனங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி, இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், ஓய்வு பெற்றோருக்கு பணிக்கொடை, பொங்கல் போனஸ், பண்டிகை கடன், ஓய்வூதியம் என அரசின் அனைத்து பலன்களும் மறுக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.
இந்த நிலையில் பலர் 50 வயதை கடந்து விட்டார்கள். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 50 சதவீதம் பெண் ஆசிரியர்கள், ஏழை தினக்கூலி விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். இந்த ரூ. 15,000 என்ற குறைவான சம்பளத்தை வைத்துக் கொண்டு இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பத்தின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளையும், வீட்டு வாடகை, மின் கட்டணம், சாப்பாடு செலவு, மருத்துவ செலவு, குழந்தைகள் படிப்பு செலவு ஆகியவற்றை சமாளிக்க கடன் சுமையில் தள்ளப்பட்டு தவிக்கின்றனர்.
எனவே, பகுதி நேர ஆசிரியர் 11,773 குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட மனிதாபிமானம் கொண்டு இந்த பட்ஜெட்டில் தவெக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
