ராயனை விட அந்தப் படங்கள் தகுதியானவைதான்… ஆனால்?

பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் கலந்துகொண்டு நடிகர் தனுஷ் பேசியுள்ளார். அப்போது அவர் ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்தும், மற்ற தனது படங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகள் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளது. ‘ராயன்’ திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட அதேவேளையில், பலரது பாராட்டைப் பெற்ற சில திரைப்படங்கள் முக்கிய பிரிவுகளில் அங்கீகாரம் பெறாதது குறித்தும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தெரிவித்த கருத்துகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தேசிய விருதுகள் அறிவிப்பு குறித்து நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் மிகவும் எளிமையாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். “‘ராயன்’ படத்தை விட சிறந்த படங்கள் என்னுடைய சினிமா பயணத்திலேயே நிறைய இருக்கின்றன. ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’, ‘மாரியான்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ராஞ்சனா’ போன்ற படங்கள் தேசிய விருதுக்கு தகுதியானவை. ஆனால், சில விஷயங்கள் நம் கையில் இருப்பதில்லை. நாம் எவ்வளவு உழைத்தாலும், எவ்வளவு சிறப்பாக ஒரு படத்தை கொடுத்தாலும், விருது கிடைப்பது என்பது நம் கட்டுப்பாட்டில் இருக்காது” என்று அவர் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

Source link