ஜெருசலேம்: ‘அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களால், யுரேனியம் செறிவூட்டும் திறனையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனையும் ஈரான் இழந்துவிட்டதால் போர் விரைவில் முடிவுக்கு வரும்’ என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஜெனரல் அலி முகமது நைனி, ‘எங்கள் திறன் குறையவில்லை; எதிரிகள் சோர்வடையும் வரை போர் தொடரும்’ என தெரிவித்திருந்தார். இதை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் அவர் பலியானார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அணுசக்தி அச்சுறுத்தலை காரணம் காட்டி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த 28ம் தேதி போரை துவக்கின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் தன் அண்டை நாடுகளில் உள்ள எரிவாயு நிலையங்கள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
பலவீனம்
இந்நிலையில், போர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நினைப்பதைவிட போர் விரைவில் முடிவடையும்,” என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: முதலில் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். அமெரிக்க – இஸ்ரேல் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது. நாங்கள் முழு மேற்காசியாவையும், ஏன் முழு உலகையும் பாதுகாக்கிறோம். ஈரானை பொறுத்தவரை , நானும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரே கருத்தை கொண்டுள்ளோம். டிரம்பிற்கு உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
கடந்த மூன்று வாரங்களாக ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களால், யுரேனியம் செறிவூட்டும் திறனையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனையும் ஈரான் இழந்துவிட்டது.
நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரான் அழிக்கப்பட்டு வருகிறது-. கூட்டுப்படைகளின் நடவடிக்கையால், ஈரானின் ராணுவ திறன் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, போர் விரைவில் முடிவுக்கு வரும். ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆயுத கிடங்குகள் பெரியஅளவில் தாக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அழிக்கப்படும்.
அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு தேவையான பாகங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை, நாங்கள் தற்போது குறிவைத்து அழித்து வருகிறோம்.
தாக்குதல் நிறுத்தம்
ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல் என்பது இஸ்ரேலின் தனிப்பட்ட முடிவு. அதிபர் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரானின் முக்கிய எரிவாயு தளங்கள் மீதான கூடுதல் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. இதுவரை வான்வழி தாக்குதல்கள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தாலும், தரைவழியாக தாக்குதல் நடத்துவதற்கும் பல வாய்ப்புகள் சாத்தியமாகவே உள்ளன.
ஈரானின் ஆட்சிமுறை ஆட்டம் கண்டு வருகிறது. தற்போதைய சூழலில் ஈரானை யார் வழிநடத்துகின்றனர் என்றே தெளிவாக தெரியவில்லை. அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளிடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல், ஒரு புரட்சியை நோக்கி செல்லுமா என்பது குறித்து முன்கூட்டியே இப்போது கணிக்க முடியாது. அதை வெளிப்படுத்துவதும், சரியான தருணத்தை தேர்ந்தெடுத்து எழுச்சி பெறுவதும் ஈரான் மக்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
![]() |
![]() |



