சென்னை : காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த, முதல்வர் விஜய், கர்நாடகா செல்வாரா என்பதில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. அம்மாநில முதல்வர் சிவக்குமார் வெற்றி பெற்ற தொகுதியில், இந்த இடம் அமைந்துள்ளது. அடுத்த சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அணைக்கான கட்டுமான பணிகளை தொடங்க, அவர் ஆயத்தமாகி வருகிறார். மேகதாது அணை கட்டினால், காவிரி நீர் வரத்து மேலும் குறையும் என்பதால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடப்பாண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரையும், கர்நாடகா வழங்க மறுத்து வருகிறது.
இதனால், குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதேநிலை தொடர்ந்தால், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி விடும். எனவே, முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி பாணியில் சட்ட போராட்டத்தை, முதல்வர் விஜய் கையில் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்த, கர்நாடகா முதல்வரை சந்திக்க, முதல்வர் விஜய் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி, பெங்களூரில், ஆகஸ்ட், 3ம் தேதி சந்தித்து பேசலாம் என, கர்நாடகா முதல்வர் தரப்பில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அதனால், கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த, தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத், ‘கர்நாடகமுதல்வரை சந்திக்க, முதல்வர் விஜய் ஆக.,3ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளார்’ என்று தெரிவித்தார்.
இதற்கு தி.மு.க., – அ.தி.மு.க., மட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பேச்சு நடத்த முதல்வர் விஜய், கர்நாடகா செல்வது சரியல்ல என்றும் விமர்சித்தன.
இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வினோத்திடம், முதல்வரின் பெங்களூரு பயணம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ”முதல்வரின் பெங்களூரு பயணம் குறித்து, கட்சி தலைமை அறிவிக்கும்,” என, மழுப்பலாக பதில் அளித்தார்.
இதனால், முதல்வர் விஜய் பெங்களூரு செல்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, கர்நாடகா செல்வது குறித்து முடிவெடுக்க, விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தி.மு.க., ஆட்சியில் சட்ட குளறுபடிகள்
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கை: காவிரி நதி நீர், மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, முதல்வர் விஜய் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பல கேள்விகளை எழுப்பி இருப்பது உண்மைக்கு முரணானது. விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர் உரிமை போன்றவற்றை பாதுகாப்பதில், தமிழக அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக, முதல்வர் விஜய் மே, 27ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து விரிவாக எடுத்துரைத்தார். அப்போது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபையும் அமல்படுத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என, பிரதமரிடம் வலியுறுத்தினார்.
அதன்பின், ஜூன் 19ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதேநாளில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடக அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதையும், தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இப்படி தமிழகத்தின் நீர் உரிமையை காக்க சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அனைத்து விதமான நடவடிக்கைகளையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
ஆனால், ஸ்டாலின் முதல்வராக இருந்த போது தான், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான, திட்ட அறிக்கையை தயார் செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது உரிய கவனம் செலுத்தவில்லை; உரிய வாதங்களையும், தி.மு.க., அரசு முன்வைக்கவில்லை. இதனால் தான், மூன்று முறை அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தி.மு.க., ஆட்சியில் நடந்த சட்டக்குளறுபடிகளால் தான், காவிரி விவகாரம், இன்று மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது. ஆனால், இதைப்பேசி, தமிழகத்தின் உரிமை குரலை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்ட, அனைத்து வழிமுறைகளையும், த.வெ.க., அரசு தொடர்ந்து முன்னெடுக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
