எழுதியவர்கள்: ஜதின் ஆனந்த், ஹரிகேஷன் சர்மா
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் அமையவுள்ள இந்த உயர்மட்டக் குழு, நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையும், இந்தியாவின் கல்வி முறையை மேலும் “நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும்”, தொழில்நுட்ப ரீதியாக வழிநடத்தப்படுவதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு நடவடிக்கை என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் கல்வித் துறையில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை ஆராய்வதற்காக பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு, நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதையும், இந்தியாவின் கல்வி முறையை மேலும் “நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும்”, தொழில்நுட்ப ரீதியாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு நடவடிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“நண்பர்களே, மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். நாம் விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம்; நாளைய தினம் நாடாளுமன்றத்திலும் கடுமையான விதிகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் கொண்டுவரும் திசையில் நாம் நகர்கிறோம். ஆனால், நாம் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நமது கல்வி முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் மாற வேண்டும்,” என்று பிரதமர் தனது ரீல் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ செய்தி பின்னர் எக்ஸ் தளத்திலும் பதிவிடப்பட்டது.
வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனை மற்றும் அபராதத் தொகையை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் “கடுமையான” புதிய சட்டமான – ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையிலேயே பிரதமர் மோடியின் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
“இவை அனைத்தையும் மனதில் கொண்டு, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு தேர்வு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தும்; இதன் அறிக்கையின் அடிப்படையில், நமது தேர்வு முறையை விரைவில் மிகவும் நம்பகமானதாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றும் பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பா.ஜ.க தலைமையிலான என்டிஏ அரசின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வினாத்தாள் கசிவு அல்லது கல்வி முறை குறித்து நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் அவர் நேரடியாகத் தொடர்புகொள்ள முயல்வது இது மூன்றாவது முறையாகும்.
முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் எதிர்பாராத, அதே சமயம் தாமதமான சனிக்கிழமை ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அரசும் பிரதமர் மோடியும் இத்துறையைச் சீர்திருத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் கடந்த வாரத்தில் தேசிய தேர்வு முகமையை (என்.டி.ஏ) முழுமையாக மாற்றி அமைத்ததும் அடங்கும்.
மோடியின் பதிவைத் தொடர்ந்து, சி.பி.எம் மாநிலங்களவை எம்.பி ஜான் பிரிட்டாஸ் பதிலளிக்கையில், “கனம் பிரதமர் அவர்களே… நீட்-யூஜி வினாத்தாள் கசிவு சர்ச்சைக்குப் பிறகு, சரியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 2024-ல் அமைக்கப்பட்ட கே.ராதாகிருஷ்ணன் கமிட்டியின் நிலை என்ன என்பதை நாட்டிற்குத் தெரியப்படுத்துங்கள். சமர்ப்பிக்கப்பட்ட 184 பக்க அறிக்கை என்ன ஆனது?” என்று கேள்வியெழுப்பினார்.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேர்வு சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு:
தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகணி
இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத்
உளவுத்துறை (IB) முன்னாள் இயக்குநர் தபன் டேகா
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி
முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால்
போக்குவரத்து/தளவாட நிபுணர் (Logistics Expert) அம்ரித் லால் மீனா
