சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த வருடாந்திர என்.சி.சி பயிற்சி முகாமில், கார்கில் விஜய் திவஸ் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.
10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில், பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, ஜூலை 26 அன்று தேசபக்தி பேரணி நடத்தப்பட்டது. கார்கில் போரில் இந்திய ஆயுதப்படை வீரர்கள் வெளிப்படுத்திய வீரம், தியாகம் மற்றும் நாட்டுப்பற்றை நினைவுகூரும் வகையிலும், இளைஞர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்க்கும் நோக்கத்திலும் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியில் என்சிசி அதிகாரிகள், ராணுவப் பயிற்றுநர்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அண்ணாமலை நகர் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில், கார்கில் போரில் உயிர்தியாகம் செய்த இந்திய வீரர்களின் வீர வரலாற்றை எடுத்துரைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி, நாட்டின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், இளைஞர்களிடம் நாட்டுப்பற்று மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் அமைந்தது.
