டெஹ்ரான்: ஈரானில், தேசிய மல்யுத்த அணியில் இடம் பிடித்த இளைஞர் உட்பட மூன்று பேரை, பொதுமக்கள் முன்னிலையில், அந்நாட்டு நீதித்துறை துாக்கிலிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், போருக்கு முன்னதாகவே பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
கடந்த ஜனவரியில், அரசுக்கு எதிரான போராட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மூன்று பேர் துாக்கிலிடப்பட்ட தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இதில் ஒருவர், 19 வயதே ஆன சலே முகமதி.
இவர், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற இளம் மல்யுத்த வீரர். ரஷ்யாவில் நடந்த, ‘ப்ரீஸ்டைல்’ மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றவர். ஆனால், போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் துாக்கிலிடப்பட்டுள்ளார்.
கடவுளுக்கு எதிரான போர் என்ற குற்றச்சாட்டில், பொது இடத்தில் வைத்து சலே முகமதி உள்ளிட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது, ஈரானில் தொடரும் போராட்டக்காரர்களுக்கு எதிரான கொடூரமான அடக்குமுறையின் தொடர்ச்சி என, மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
