கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்து வழங்கிய மறுவாழ்வு சிகிச்சையால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 24 வயது இளம் பெண் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து இயல்பு வாழ்க்கையை நோக்கி முன்னேறி வருகிறார்.
கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட தீவிர மருத்துவச் சிக்கலால் முதலில் ஜிப்மர் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சை பெற்ற அவர், மேலதிக மறுவாழ்வு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மகப்பேறியல், பொது மருத்துவம், தீவிர சிகிச்சை, ENT, மனநல மருத்துவம், பிசியோதெரபி, செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறை குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்தனர். தொடர்ச்சியான சுவாசப் பயிற்சி, உடல் இயக்கப் பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் மனநல ஆதரவு ஆகியவற்றின் மூலம் நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் தன்னிச்சையாக சுவாசிக்கும், உணவு உட்கொள்ளும் மற்றும் உடல் இயக்கத் திறனை மீட்டுள்ளார்.
இந்த வெற்றிகரமான சிகிச்சை, தமிழ்நாடு அரசின் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் தரமான அவசர சிகிச்சை மற்றும் பல்துறை மறுவாழ்வு மருத்துவச் சேவைகளின் சிறப்பை வெளிப்படுத்துவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அறிந்து நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
