“ஜனநாயகன் என்ன பாசமலர் படமா? அழுகை எப்படி வரும்?”

சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, “ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதை விட, அவர்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாலும் பழமும், பாசமலர், பாகப்பிரிவினை போன்ற திரைப்படங்களைப் பார்த்தால் அழுகை வரும். உற்சாகமூட்டக்கூடிய நடிகரான விஜய் படத்தைப் பார்த்து (ஜனநாயகன்) அழ வேண்டிய அவசியமில்லை. விஜய், அஜித் திரைப்படங்கள் சண்டைக் காட்சிகளுடன் வேகமான திரைப்படங்களாகவே இருக்கும்.  

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி  விலகியதை, பிரச்சினைகள் வேண்டாம், மாணவர்கள் சமுதாயம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மத்திய அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்றுதான் பார்க்க வேண்டும். போராட்டத்தின் நியாயம் கருதி மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை அடிபணிந்ததாக சொல்லக் கூடாது. அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் நிலைப்பாட்டையே எந்த அரசும் நடைமுறைப்படுத்தும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள். நடப்பது அனைத்தும் நியாயமாகத் தெரிகிறது. லாக்-அப் மரணம் குறித்து அன்றைக்கு பேசியது போல் பேசவில்லை என்றாலும், நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். லாக்-அப் மரணம் குறித்து நியாயமான நடவடிக்கையை தவெக அரசும் முதல்வரும் எடுக்க வேண்டும்.

அதிமுகவில் இருந்து சென்றவர்கள் யாரும் விஜய் முதல்வராக வேண்டும் என விஜய்க்காக தேர்தல் பணியாற்றவில்லை. தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகுதான் அவர்கள் அங்கு செல்கிறார்கள். அந்த வெற்றியில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஏற்கனவே தவெகவில் உண்மையாக உழைத்தவர்களை ஓரங்கட்டி பதவிக்கு வர நினைப்பது சந்தர்ப்பவாதம். உங்களை உருவாக்கி வளர்த்து விட்ட இயக்கம் அதிமுக. அதிமுகவில் 10 ஆண்டுகள் அமைச்சராகவும், 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துகொண்டு, தங்களை வளர்த்து விட்ட அதிமுகவை தூக்கி எறிந்துவிட்டு செல்பவர்கள், தவெகவை தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும்? இதைப் புரிந்து தவெக நிர்வாகிகளும், தவெக தலைவர் விஜயும் நடந்துகொண்டால் சரிதான். தற்போது தவெகவிற்கு வந்தவர்களை வைத்து கட்சி நடத்தி வெற்றி பெறவில்லை. தவெக வெற்றி பெற்ற பின்னர்தான் அங்கு செல்கிறார்கள். எனவே தவெக விழிப்பாக இருக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர், “அதிமுகவின் வேர் வலுவாக உள்ளது. வேர் இருக்கும் வரை மரம் செழித்து வளரும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக என்ற இயக்கம் வலுவாக இருக்கிறது. பலமான தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைப் போன்று தங்களை எதிர்ப்பவர்களையும், எதிர்குரல் எழுப்புவார்களையும் எடப்பாடி பழனிச்சாமி அனுசரித்துச் செல்கிறார். அதையும் மீறி வெளியே சென்றவர்கள் வீணாகப் போவார்கள் என்பது எங்களுக்கும் தெரியும்; தமிழக மக்களுக்கும் தெரியும். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்கள் வீணாகிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனி முத்திரை பதிக்கும்” என்றார். 

Source link