“நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடத்தைப் பராமரிக்காமல் அரசு அலட்சியம் காட்டுவது வேதனையளிக்கிறது” எனச் சாடியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கத் தலைவர் மோகன், புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்தை உடனடியாகப் புனரமைக்க வேண்டும் எனப் புதுவை அரசுக்குக் காரசாரமான கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் மண்டியிட்டுக் கிடக்கும் போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்தை புனரமைத்தல் தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் ராணுவ வீரர்கள் தலைவர் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளாக, புதுவை கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் வீரர் நினைவுச் சின்ன வளாகம் மிகவும் மோசமான நிலையில், பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்த வளாகத்தை பராமரிக்க வேண்டியது பொதுப் பணித்துறையா, காவல் துறையா, தகவல் மற்றும் விளம்பரத்துறையா அல்லது முன்னாள் இராணுவ வீரர்கள் நலத் துறையா என்பது தெரியாத நிலையில், துணை நிலை ஆளுநர் அவர்களுக்கும் முதல்வர் அவர்களுக்கும் பல முறை மனு சமர்ப்பித்து வந்துள்ளோம். இன்றுவரை புதுவை அரசு போர் வீரர்கள் நினைவுச் சின்ன வளாகம் மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது.
தினசரி செய்தித்தாள்கள் மூலமாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகவும் அரசுக்கு இது தொடர்பாக கோரிக்கைகள் வைத்தும் எந்த பயனும் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த இராணுவ வீரர்கள் ஆன்மா உறங்குகின்ற இடமான போர் வீரர்கள் நினைவுச் சின்ன வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டியது நமது அரசின் கடமை.
நாளுக்கு நாள் புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சரியான பராமரிப்பின்றி காணப்படும் நமது போர் வீரர்கள் நினைவுச் சின்ன வளாகத்தைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் முகம்
சுளித்து வருகின்றனர்.
இதே கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரஞ்சு போர் வீரர்கள் நினைவுச் சின்ன வளாகம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
முதல்வர் போர் வீரர்கள் நினைவுச் சின்ன வளாகத்தினை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய உத்திரவிடவேண்டும் என்று புதுவை வாழ் அனைத்து முன்னாள் இராணுவ வீரர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
