வெள்ளி நாயகன் ரிஷிகாந்த சிங்: காமன்வெல்த் பளுதுாக்குதலில் அசத்தல்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்திய வீரர் ரிஷிகாந்த சிங், வெள்ளி வென்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு பளுதுாக்குதல் பைனலில் இந்தியா சார்பில் ரிஷிகாந்த சிங் சனம்பம் 28, பங்கேற்றார். மணிப்பூரை சேர்ந்த ரிஷிகாந்த சிங், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 121 கிலோ பளுதுாக்கினார். பின், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் முதல் வாய்ப்பில் 143 கிலோ பளுதுாக்கிய இவர், அடுத்த இரு வாய்ப்புகளில் 148, 151 கிலோ பளுதுாக்க முடியாமல் ஏமாற்றினார். ஒட்டுமொத்தமாக 264 கிலோ (121+143) பளுதுாக்கிய ரிஷிகாந்த சிங், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் மணிப்பூர் வீரரானார் ரிஷிகாந்த சிங். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ‘பாரா பவர்லிப்டிங்’ போட்டியில் இந்தியாவின் ஜண்டு குமார் வெண்கலம் வென்றிருந்தார்.

மலேசியாவின் பின் கஸ்டான் முகமது அனிக், 273 கிலோ (‘ஸ்னாட்ச்’ 121, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ 152) பளுதுாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வெண்கலப் பதக்கத்தை கென்யாவின் ஜோஷுவா அமுங்கா எம்போயா (260 கிலோ, ‘ஸ்னாட்ச்’ 115, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ 145) கைப்பற்றினார்.

தேசிய சாதனை

‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 121 கிலோ பளுதுாக்கிய ரிஷிகாந்த சிங், சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இவர், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 120 கிலோ பளுதுாக்கி தேசிய சாதனை படைத்திருந்தார்.

இம்பால் வீரர்

மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாலில் பிறந்தவர் ரிஷிகாந்த சிங். இம்பாலில் உள்ள தேசிய விளையாட்டு அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட இவர், 2016ல் ஜூனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் 3வது இடம் பிடித்தார். இந்திய ராணுவ அணிக்காக விளையாடிய இவர், புனே, பாட்யாலா, பல்கேரியாவில் பயிற்சி மேற்கொண்டார். கடந்த 2019ல் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இவர், 2022ல் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 6வது இடம் பிடித்தார். கடந்த ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் கைப்பற்றிய ரிஷிகாந்த சிங், காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க முதல் முறையாக தகுதி பெற்றார்.

Source link