வைபவ் இளமை…ஆட்டம் புதுமை: கோப்பை வென்று இந்தியா அருமை

ஹராரே: மூன்றாவது ‘டி-20’ போட்டியில், இளம் வைபவ் 81 ரன் விளாச, இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 3-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது.

ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு சவாலில் வென்ற இந்தியா, தொடரை 2-0 என ஏற்கனவே வென்றது. முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி, நேற்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ், ஷிவம் துபேவுக்கு பதிலாக அசோக் சர்மா, சூர்யான்ஷ் ஷெட்கே இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு 15 வயது வைபவ் சூர்யவன்ஷி நல்ல துவக்கம் தந்தார். சிக்கந்தர் ராசா வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். அபிஷேக் சர்மா (2), தொடர்ந்து மூன்றாவது முறையாக முசரபானி ‘வேகத்தில்’ அவுட்டாகி ஏமாற்றினார். கடந்த 6 இன்னிங்சில் அபிஷேக் 10, 16, 3, 1, 8, 2 ரன் என சொதப்புகிறார்.

இரண்டாவது அரைசதம்: ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பதை அறிந்த வைபவ் விவேகமாக ஆடினார். அனைத்து பந்துகளையும் அடித்து நொறுக்கவில்லை. ஒன்று, இரண்டு ரன் எடுத்தது புதுமையாக இருந்தது. பல விதமான ‘ஷாட்’ அடித்து வியக்க வைத்தார். சிக்கந்தர் ராசா பந்தில், 102 மீ., துாரத்திற்கு இமாலய சிக்சர் அடித்தார். வெஸ்லி மாதவரே பந்தில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ மூலம் பவுண்டரி அடித்தார். 31 பந்தில் சர்வதேச ‘டி-20’ அரங்கில் இரண்டாவது அரைசதம் எட்டினார். பின் வழக்கம் போல ஆங்கில ‘ஏ’ எழுத்து வடிவில் விரல்களை காண்பித்து தனது தாயார் ஆர்த்திக்கு அர்ப்பணித்தார். இரண்டாவது விக்கெட்க்கு வைபவ்-இஷான் 75 ரன் சேர்த்தனர். சிக்கந்தர் ராசா ‘சுழலில்’ இஷான் (29) போல்டானார். வெஸ்லி பந்தில் இவான்சின் அற்புத ‘கேட்ச்சில்’ அவுட்டான வைபவ் (81 ரன், 49 பந்து, 8×4, 4×6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஷ்ரேயஸ் ஐயர், 27 ரன் விளாசினார். ரிங்கு சிங், 25 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 192/5 ரன் குவித்தது. திலக் வர்மா (11) அவுட்டாகாமல் இருந்தார்.

மயங்க் யாதவ் மிரட்டல்: கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு இந்திய பவுலர்கள் மீண்டும் ‘செக்’ வைத்தனர். மயங்க் யாதவ், மணிக்கு 147 கி.மீ., வேகத்தில் வீசிய முதல் பந்தில் பிரையன் பென்னட் (0) அவுட்டானார். யாஷ் தாகூர் ஓவரில் (4வது) டியான் மையர்ஸ் (19), கேப்டன் சிக்கந்தர் ராசா (0) வரிசையாக வெளியேறினர். அடுத்து வந்த ரியான் பர்ல் பவுண்டரி அடிக்க, தாகூரின் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது. பிஷ்னோய் வலையில் பென் கர்ரான் (20) சிக்கினார். மயங்க் பந்தை (15.2) துாக்கி அடித்தார் ரியான் பர்ல். இதை பிடிக்க எல்லையில் இருந்து ஓடி வந்து முயற்சித்த வைபவ் விரலில் லேசான காயம் ஏற்பட்டது. வெஸ்லி, 28 ரன் எடுத்தார். பர்ல் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

‘பீல்டிங்’ ஏமாற்றம்: ‘கீப்பர்’ இஷான் கிஷான், திலக் வர்மா என பலரும் ‘கேட்ச்’ வாய்ப்பை கோட்டைவிட்டு அதிர்ச்சி அளித்தனர். ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 157/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. பர்ல் (54), நியூமேன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து 3 போட்டிகளில் அசத்திய இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் மயங்க் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் (81 ரன்), தொடர் நாயகன் (3 போட்டி, 151 ரன்) விருதை வைபவ் வென்றார்.

‘சிக்சர்’ மன்னன்

‘டி-20’ அரங்கில் ஒரு ‘காலண்டர்’ ஆண்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய பேட்டர் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி (86 சிக்சர், 2026) மூன்றாவது இடம் பெற்றார். முதல் இரு இடங்களில் அபிஷேக் சர்மா (108 சிக்சர்- 2025, 87 சிக்சர்-2024) உள்ளார்.

மயங்க் ‘மேஜிக்’

மயங்க் யாதவ் நேற்று முதல் பந்தில் பிரையன் பென்னட்டை அவுட்டாக்கினார். சர்வதேச ‘டி-20’ அரங்கில் முதல் பந்தில் அதிக முறை விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை (தலா 3 முறை) புவனேஷ்வர் குமார் உடன் பகிர்ந்து கொண்டார்.

Source link