தங்கம் வென்றார் மீராபாய் சானு: காமன்வெல்த் பளுதுாக்குதலில் ஆதிக்கம்

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்தார் பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதுாக்குதல் பைனலில், இந்தியாவின் மீராபாய் சானு 31, பங்கேற்றார். மணிப்பூரை சேர்ந்த மீராபாய், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 85, ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 105 கிலோ பளுதுாக்கினார். ஒட்டுமொத்தமாக 190 கிலோ (85+105) பளுதுாக்கிய மீராபாய் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஹாட்ரிக்’ தங்கம்: இது, காமன்வெல்த் விளையாட்டில் மீராபாய் கைப்பற்றிய ‘ஹாட்ரிக்’ தங்கம், 4வது பதக்கம் ஆனது. ஏற்கனவே 2014ல் வெள்ளி வென்ற மீராபாய், 2018, 2022, 2026ல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் அதிகபட்சமாக 85 கிலோ பளுதுாக்கிய மீராபாய், 48 கிலோ பிரிவில் புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். தவிர இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம், 3வது பதக்கம் ஆனது. ஏற்கனவே ரிஷிகாந்த் சிங் (வெள்ளி, பளுதுாக்குதல்), ஜண்டு குமார் (வெண்கலம், ‘பாரா பவர்லிப்டிங்’) பதக்கம் வென்றிருந்தனர்.

Source link