புதுடில்லி: மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்தியாவின் பேட்டரி ரசாயனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் துறைக்கு நீண்டகால வளர்ச்சி வாய்ப்பு உருவாகும் என, ‘நுவாமா’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில் ரசாயன செல்களுக்கான தேவை, 2025-ல் 40 ஜிகாவாட் மணியாக இருந்த நிலையில், 2030-க்குள் 700 ஜிகாவாட் மணியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025- – 30 காலகட்டத்தில் ஆண்டு சராசரி வளர்ச்சி 39 சதவீதமாக இருக்கும். இதே காலத்தில் மின்சார வாகன பேட்டரிகளுக்கான தேவை, ஆண்டுக்கு 35 சதவீதமும், பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகளுக்கான தேவை, 78 சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 50 ஜிகாவாட் மணி பேட்டரி செல் உற்பத்தி திறனை உருவாக்க, 18,100 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.,) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மொத்தம், 178 ஜிகாவாட் மணி உற்பத்தி திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
