புதுடில்லி: ஒடிஷா கடற்கரையை ஒட்டிய மகாநதி கடற்படுகையில், முதல் ஆழ்கடல் ஆய்வுக் கிணறு தோண்டும் பணியை, ஓ.என்.ஜி.சி., நிறுவனம் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின், ‘சமுத்ர மந்தன்’ திட்டத்தின் கீழ், ‘எம்.என்.-டி.டபிள்யூ.18-1-எச்-டி’ என்ற கிணறு தோண்டப்படுகிறது. இது, கோனார்க் கண்டுபிடிப்பு பகுதியிலிருந்து 23 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில், 3,000 மீட்டர் ஆழம் வரையிலான பகுதிகளில், 560 கோடி மெட்ரிக் டன் எண்ணெய்க்கு இணையான ஹைட்ரோகார்பன் வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முன்பு ஆய்வு நடத்த அனுமதி இல்லாத கிட்டத்தட்ட, 10 லட்சம் சதுர கி.மீ. கடல் பகுதிகளில் தற்போது ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆய்வின் வாயிலாக, உள்நாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதி சார்பை குறைத்து, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என, ஓ.என்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
