அமெரிக்காவில் 10 சதவீதமாக தொடரும் இறக்குமதி வரி; இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் நிம்மதி

திருப்பூர்: அமெரிக்காவில், இறக்குமதி ஆடைகளுக்கான வரி விகிதம், 10 சதவீதமாக தொடர்வதால், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நம் நாட்டின் ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா முக்கிய இடத்தில் உள்ளது. 2025 – 26ல், இந்தியாவில் இருந்து, 7.68 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. குறிப்பாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மட்டும், 42,478 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.

கடந்தாண்டு, அமெரிக்காவின் அபரிமிதமான வரி விதிப்பால், இந்தியாவின் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. நடப்பாண்டு பிப்., மாதத்துக்கு பின், வரி விகிதம், 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்க வர்த்தக சட்டப்பிரிவு, 301ன்படி, இந்திய பொருட்களுக்கான வரி விதிப்பு, கட்டணம், 10 சதவீதம் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை உட்பட, இந்திய ஆடைகளுக்கு, இறக்குமதி வரியாக, 16 சதவீதம் விதிக்கப்படுகிறது. அத்துடன், வரி விதிப்பு, 10 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்படுவது வழக்கம். எவ்வித உயர்வும் இல்லாமல், கட்டணம் 10 சதவீதமாக தொடர்வதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இயல்பு நிலை திரும்பும்!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ”கடந்த ஐந்து மாதங்களாக, 10 சதவீதமாக இருந்த வரி விகிதம், மீண்டும் சட்டரீதியாக தொடருமென அறிவிக்கப்பட்டிருப்பது சற்று நிம்மதி அளிக்கிறது. இதனால், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை, நிம்மதியாக தொழில் செய்யலாம்” என்றார்.

Source link