பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிப்பு; மாற்று ஏற்பாடு செய்யாமல் வாரியம் அலட்சியம்

சென்னை: பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்யாமல், தமிழக குடிநீர் வாரியம் மெத்தனம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 90 அணைகள், 14,141 பாசன ஏரிகள் உள்ளன. நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டிலும் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், ஏரிகள் வறண்டுள்ளன.

நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகளில், 59 அணைகள் வறண்டுள்ளன. மேலும், 16 அணைகளில் 25 முதல் 50 சதவீதம் மட்டுமே நீர் உள்ளது. பாசன ஏரிகளில் 3,489 வறண்டு கிடக்கிறது. மேலும், 6,158 ஏரிகள் வறண்டு விடும் நிலையை எட்டியுள்ளன. ஆறுகள், அணைகள், ஏரிகள் வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை, தமிழக குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது.

நீர்நிலைகள் வறண்டுள்ளதுடன், நிலத்தடி நீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. பல மணி நேரம் மோட்டாரை இயக்குவதால், மின்சார செலவும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில், குடிநீர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

விருதுநகர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, துாத்துக்குடி, தஞ்சாவூர், நாமக்கல், பெரம்பலுார், மதுரை, சிவகங்கை, தர்மபுரி, கடலுார், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குடிநீர் பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், நிலத்தடி நீர் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நீராதாரங்களின் நிலை விபரம், நீர்வளத்துறை வாயிலாக, தமிழக குடிநீர் வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் ஆதாரத்திற்கான மாற்று திட்டத்தை மேற்கொள்ளாமல், தமிழக குடிநீர் வாரியம் மவுனம் காத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

சிறப்பு நிதி ஒதுக்கவில்லை

தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு, கோடைக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதியை வைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய ஆழ்துளை குழாய்கள் அமைப்பது, கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும். நடப்பாண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், குடிநீர் பிரச்னையை சமாளிக்க, சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
முதல்வரின் நேரடி கட்டுப் பாட்டில் துறை உள்ளதால், அவரிடம் நிலைமையை எடுத்துக்கூறி பணம் கேட்பதற்கு, உயர் அதிகாரிகள் தயங்குகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து, மக்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link