திருப்பூர்: அரசு மானியத்துடன், கொசு வலை தயாரிப்புக்கான பொது பயன்பாட்டு மையம், கரூரில், 30.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது.
அரசு திட்டத்தில், மத்திய, மாநில அரசு மானியத்துடன், சிறுதொழில் நிறுவனங்கள் பயன்பெற, இயந்திரங்கள், கருவிகள் கொண்ட பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.
திருப்பூரில் அமைக்கப்பட்ட, ‘நிட்டிங்’ மற்றும் ‘பிரின்டிங்’ தொழில்களுக்கான மையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, கரூரில், கொசு வலை உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையம் அமைய உள்ளது.
கரூர் மாவட்டத்தில், 1,002 குறு, சிறு, கொசு வலை உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதிக முதலீடு செய்ய இயலாததால், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பயன்பாட்டுக்கான கொசு வலை உற்பத்தி தொழில் நலிவடைந்தது. புதிய தொழில்நுட்பத்தில் தொழிலை மேம்படுத்த ஏதுவாக, பொது பயன்பாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
மொத்தம், 45 நிறுவனங்கள் இணைந்து, ‘சிந்தடிக் கிளஸ்டர்’ உருவாக்கப்பட்டுள்ளது. கிளஸ்டர் பங்களிப்பாக, 6.58 கோடி ரூபாய்; மத்திய அரசு மானியமாக 17.59 கோடி ரூபாய், மாநில அரசு மானியமாக 5.98 கோடி ரூபாய் என, 30.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கொசு வலை உற்பத்திக்கான பயன்பாட்டு மையம் அமைய, மத்திய அரசு அங்கீகார அனுமதி வழங்கியுள்ளது.
