சென்னை : வேட்பாளர்களை தேர்வு செய்ய நடந்த, பா.ஜ., மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில், மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்னை பற்றி, பிரதமர் மோடி விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி, கேரளம், அசாம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, அக்கட்சியின் தேர்தல் கமிட்டி கூட்டம், கடந்த 18ம் தேதி இரவு 7:00 மணிக்கு டில்லியில் நடந்தது.
ஆலோசனை
மேற்காசிய போரால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். சர்வதேச அரசியல் நிபுணர்கள், கச்சா எண்ணெய் வர்த்தக நிபுணர்களுடனும், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனால் கடும் பணிச் சுமையில் இருப்பதால், மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என, பா.ஜ., நிர்வாகிகள் நினைத்தனர். ஆனால், திட்டமிட்டபடி சரியான நேரத்தில், கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களின் பெயர்களை, அந்தந்த மாநில தலைவர்கள் சொன்னவுடன், தன் கருத்தையும் தெரிவித்துள்ளார்.
புதிய வேட்பாளர் என்றால், கடந்த முறை வென்றவரை ஏன் நிறுத்தவில்லை; அவர் மீது அதிருப்தி உள்ளதா; இவரை ஏன் தேர்வு செய்தீர்கள் என கேட்டுள்ளார். சில நிர்வாகிகள் பெயரை குறிப்பிட்டு, அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாமே என்றும் விசாரித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் குறுக்கிட்டு, கருத்துகளை மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கப்படும் சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளின் தளங்கள் மீது, ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கூட்டத்தின் போது, இது பற்றிய தகவல்களை, பா.ஜ., தலைவர்களிடம், மோடி பகிர்ந்துள்ளார்.
மக்கள் தொகை
கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், உலகின் பெரும்பாலான நாடுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு என்பதால், இந்தியாவின் தேவை அதிகம். அதனால், இங்கு விலையை உயர்த்த வேண்டிய நிலை வரும். இந்த நெருக்கடியை, மக்களுக்கு அதிக பாதிப்பின்றி எதிர்கொள்ள தயாராகி வருவதாக, பா.ஜ., தலைவர்களிடம், பிரதமர் மோடி கவலையுடன் தெரிவித்துள்ளார்.
