டெஹ்ரான்: ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பையும், லெபனானையும் பாதுகாப்பது எங்களின் கடமை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் போரின் ஒரு பகுதியாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்புள்ள ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா முஜ்தபா கமேனி, போரை தொடர்ந்து முன்னெடுப்பது மட்டுமே ஒரே வழி என்று ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது; அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அடக்குமுறைகளால் உலகநாடுகள் சலிப்படைந்துள்ள நிலையில், இந்தப் போரை தொடர்ந்து முன்னெடுப்பது மட்டுமே ஒரே வழி. ஹிஸ்புல்லா போராளிகளையும், லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது ஈரானின் ராஜதந்திர கடமையாகும்.
அமெரிக்காவுடனான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை முற்றிலும் நிறுத்துவது தான் முதன்மையான நிபந்தனையாக இருக்கும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
