கொத்து கொத்தாக இறந்த பறவைகள்; கிண்டி சிறுவர் பூங்கா இழுத்து மூடல்

சென்னை: பொதுமக்கள் பார்வைக்காக, பெரிய அளவிலான கூண்டுகளில் அடைக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள், கொத்து கொத்தாக செத்து மடிந்ததால், கிண்டி சிறுவர் பூங்கா நேற்று திடீரென மூடப்பட்டது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.

சென்னை, அடையாறு பகுதியில், கடந்த ஜன., 5ம் தேதி, காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த காகங்களின் மாதிரிகள் எடுத்து, ஆய்வுக்காக மத்திய பிரதேசம் மாநிலம், போபாலில் உள்ள மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. பரிசோதித்த ஆராய்ச்சி நிறுவனம், பறவை காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தது.

மேலும், மாநிலம் முழுதும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், இறக்கும் காகங்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவும், தமிழக தலைமை செயலருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. பறவைகளை கைகளால் தொடக்கூடாது எனவும் எச்சரித்தது.

சீரமைப்பு

தமிழக கால்நடை துறை, மக்கள் நல்வாழ்வு துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை. குறிப்பாக, காகங்கள், புறாக்கள்தான் இறக்கின்றன; மனிதர்களிடையே பாதிப்பில்லை என அலட்சியம் காட்டி வருகிறது.

இந்நிலையில், கிண்டி சிறுவர் பூங்காவிலும், பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, 22 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த பூங்கா சமீபத்தில், 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக, இங்கு பெரிய அளவில் கூண்டுகள் அமைத்து, அதில் வேடந்தாங்கலில் காணப்படும் பறவைகள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. கூழைக்கடா, கரண்டிவாயன், வெள்ளை கூழைக்கடா, வக்கா, சாம்பல் நாரை, சிறிய கொக்கு உட்பட, 10 வகையிலான, 200க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

இதில், 10க்கும் மேற்பட்ட பறவைகள், சில நாட்களுக்கு முன் இறந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் பறவைகள் கொத்துக் கொத்தாக இறப்பது தொடர்ந்து வருகிறது. இதுவரை, 50க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.

பறவைகள் இறப்பு குறித்து விசாரிக்க, மேலதிகாரிகள் உத்தரவிட்டதாககூறப்படுகிறது. இதன் தொடர் நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா, நேற்று மூடப்பட்டது.

முன்னெச்சரிக்கை

வழக்கமாக, பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய் கிழமை விடுமுறை விடப்படும். ஆனால், இந்த வாரம் செவ்வாய் கிழமை மூடப்பட்ட நிலையில், நேற்று மீண்டும், திடீரென மூடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பறவைகள் இறந்த விவகாரம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என, அதிகாரிகள் கவனம் செலுத்தினர். பறவை காய்ச்சல் பாதிப்பால் பறவைகள் இறந்திருக்குமோ என்ற அச்சத்தில், சிறுவர் பூங்காவை மூடும் முடிவை, அதிகாரிகள் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கிண்டி சிறுவர் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘பறவை காய்ச்சல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பணிகளுக்காக பூங்கா மூடப்பட்டுள்ளது’ என்றனர்.

அரசு துறைகள் அலட்சியம்

சென்னையை தொடர்ந்து, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், பறவை காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்து வருகின்றன. அவற்றின் மாதிரிகளை சேகரித்து, மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனைக்கு அனுப்ப, அரசு தயக்கம் காட்டி வருகிறது. இதுவரை மனிதர்களிடையே பாதிப்பு கண்டறியப்படவில்லை என்பதே அலட்சியத்துக்கு காரணம்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதே நேரம், மனிதர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவை, 0.5 சதவீதம் பேருக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவர்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, மருத்துவ முகாம் போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link