இந்த முறை கோவையில் எப்படி ஜெயிப்பீர்கள்? தி.மு.க. நேர்காணலில் கேள்வி மேல் கேள்வி

கோவை: கோவை தெற்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க, நேர்காணலில் தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம், சென்னையில் தி.மு.க. தலைவரான முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.

அதில் பங்கேற்ற தி.மு.க. வினர் கூறியதாவது: ஒருவர் இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ஒரு தொகுதிக்கான நேர்காணலில் மட்டுமே பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. தெற்கு தொகுதிக்கு 35 பேர் பங்கேற்றனர். இத்தனை பேர் வந்திருக்கிறீர்களே; ஒருவருக்கு தானே சீட் தர முடியுமென கேட்டார்.

கடந்த தேர்தலில் மூன்றாமிடத்துக்கு சென்றது ஏன் என கேட்டார். காங்கிரஸ் போட்டியிட்டது; அவர்கள் வேலை செய்யவில்லை. இரண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் தோற்று விட்டனர். அதற்கு முன் இரண்டு முறை தி.மு.க. வென்றது. அதனால், தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என கூறினோம்.

காங்கிரசுக்கு 28 தொகுதி கொடுத்திருக்கிறோம்; அவர்களும் கேட்பார்களே என அவர் கூறியதற்கு, கடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக தோற்று விட்டனர். நம் கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள்; தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தெற்கு தொகுதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வலியுறுத்தினோம். அதற்கு, ‘உங்களை தவிர வேறு யாரை நிறுத்தினாலும், இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றார்.

சிங்காநல்லுார் தொகுதிக்கான நேர்காணலில், 22 பேர் பங்கேற்றனர். கடந்த தேர்தலில் 7 சதவீதம் ஓட்டு குறைந்தது ஏன் என கேட்டார். கடந்த முறை போட்டியிட்டு தோற்றது யாரென கேட்டார். முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திக் எழுந்து நின்றார். அவரை அமரச் சொன்னார்.

இந்த முறை எப்படி ஜெயிப்பீர்கள் என கேட்டதற்கு, ஒவ்வொரு நிர்வாகியும் ஆளுக்கொளு விளக்கம் கூறினர். இதேபோல், மற்ற தொகுதியிலும் நேர்காணல் நடத்தப்பட்டது. இவ்வாறு, தி.மு.க. வினர் கூறினர்.

Source link