தி.மு.க. அறக்கட்டளை தொடர்பான தகவல்களை தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வெளியிடாமல் மறைத்ததாகக் கூறி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய முதன்மை அமர்வு முன், திங்கட்கிழமை (ஜூலை 27, 2026) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கொளத்தூர் தொகுதியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி (DMSK) சார்பில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட 73 வயது வழக்கறிஞர் டி. சிவஞானசம்பந்தன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது
”1951 ஆம் ஆண்டுச் சட்டத்தின் பிரிவு 33ஏ மற்றும் தேர்தல் விதிகள், 1961 இன் விதி 4ஏ-ன் படி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துகள், கடன்கள், அறக்கட்டளைகள், நிதி நலன்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை பிரமாணப் பத்திரத்தில் (படிவம்-26) தாக்கல் செய்ய வேண்டும்.
வாக்காளர்கள் வேட்பாளர்களின் நிதி நிலையை அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் வாக்களிப்பதை உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் திமுக அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில் ரூ.2.27 கோடி மதிப்பில் ஒரு அசையா சொத்து இந்த அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த முக்கியமான விவரம் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்படவில்லை” என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கடந்த மே 12, 2026 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் மனுதாரர் முறைப்படி புகார் அளித்துள்ளார். உடனடியாக விசாரணை நடத்தி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்த நிலையில், அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்தே, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
