வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான ஊழல் பட்டியல் குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்த விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி புதன் அன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைகளில் நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமையிலான குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500, அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் எனப் பல்வேறு வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
அமைச்சர் மரிய வில்சன் தயாரிக்கும் ஊழல் பட்டியல்
அதேசமயம் நிதி நிலைமை சரியில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்றும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டதையும் கவனிக்க வேண்டியுள்ளது. இந்த சூழலில் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பு பணிகள் உடன் கூடுதலாக ஒரு வேலையை அமைச்சர் மரிய வில்சன் கையில் எடுத்துள்ளார். அதுதான் திமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல். இதுகுறித்து விரிவான தணிக்கை அறிக்கையை தயாரித்து வருவதாக நேற்று சென்னை பிராட்வேயில் 10, 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
அமைச்சர் மரியா வில்சன் | பேச பேச | அரங்கத்தில் வந்த சத்தம் !
பட்ஜெட் தொடரில் வெளியாகும் முக்கிய அறிக்கை
நடப்பு கூட்டத்தொடரில் ஊழல் அறிக்கை வெளியிடப்படும். அடுத்தடுத்து ஊழல் தொடர்பான அறிக்கைகள் வெளிவந்து கொண்டே இருக்கும். சில விஷயங்களை முன்கூட்டியே வெளியிட முடியாது. எனவே Wait and Watch, கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எனப் பேசியுள்ளார். இந்த பேச்சு இன்றைய நாளின் தலைப்பு செய்திகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளமாக செயல்படுத்தப்பட்டன என்று அனைவரும் அறிவர். இருப்பினும் ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் வித்திட்டனர். அதற்கு முக்கிய காரணம், அரசு அலுவலகங்கள் முதல் அமைச்சர்கள் மட்டம் வரை பல்வேறு படிநிலைகளில் லஞ்சம் வாங்கியுள்ளனர். இது சாமானியர்களின் அன்றாட வாழ்வில் பெரும் நெருக்கடியாக மாறியது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதில்லை
தற்போது தவெக ஆட்சி அமைந்து 60 நாட்களை கடந்துள்ள நிலையில், பலரும் நிம்மதி பெருமூச்சு விடும் விஷயமாக பார்க்கப்படுவது அரசு அலுவலகங்களில் முன்பை போல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்பது தான். அந்த அளவிற்கு கடந்த கால ஆட்சிகளில் அரசு அலுவலகங்களும், உயர் அதிகாரிகளும் கைவரிசையை காட்டியிருக்கின்றனர். நடப்பு ஆட்சியில் லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டும் தீர்வாகாது. இதற்கு முன்பு யாரெல்லாம் முறைகேடான வகையில் பணம் வாங்கி கொண்டு வேலை செய்தார்களோ, அலைக்கழித்தார்களோ அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் வருங்காலத்தில் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கு படிக்கல்லாக அமையும்.
அதிமுக மாஜிக்கள் வழக்குகளை தூசு தட்டிய திமுக
அந்த வகையில் அமைச்சர் மரிய வில்சன் தயாரிக்கும் ஊழல் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு துணை நின்ற அதிகாரிகளின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தூசு தட்டப்பட்டன. ரெய்டுகள் அடுத்தடுத்து அரங்கேறின.
ஆனால் அதன்பிறகு கைது நடவடிக்கைகள், விசாரணை, தண்டனை என எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை திமுக, அதிமுக இடையிலான திரைமறைவு நகர்வுகளின் பிரதிபலனாக நடவடிக்கை எடுக்காமல் விட்டிருக்கலாம். அப்படியான ஒரு நிலைக்கு தவெக அரசு சென்றுவிடக் கூடாது. காலம் தாழ்த்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source link
