“அது என்ன பார்ட்டி ஃபண்ட்?…”- சேகர்பாபுவை விமர்சித்த அமைச்சர் மரிய வில்சன்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதனைத் தொட்ர்ந்து மரிய வில்சன் பேசுகையில், திமுக முன்னாள் அமைச்சரும் துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபுவை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார்.

அதாவது அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், “பார்ட்டி ஃபண்ட் என்றால் என்ன என்று தெரியாதது போல, ‘அது என்ன பார்ட்டி ஃபண்ட்?’ என்று கேட்டுவிட்டு ஒருவர் வெளியே (சட்டமன்றத்தில் இருந்து) சென்றார். அந்த நபர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர். அவருக்கு இந்த மேடை வாயிலாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். உண்மையில் இது பாராட்டு விழாவாக இருந்தாலும், நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், இந்த தொகுதியில் நான் முதல் முறையாக உரையாற்றுகிறேன். வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீங்கள் கண்டிப்பாக ஒரு விஷயத்தைப் பார்ப்பீர்கள். தனியாக ஒரு அறிக்கையை தயாரித்து வருகிறோம். 

அந்த ஆடிட்டிங் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வோம். அப்போது அந்த ஊழல் பட்டியலில் என்னென்ன இடம்பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இங்குள்ள மாணவ, மாணவியர் நம்பிக்கையுடன் இருக்கலாம். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது போலவே, நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காணும் திட்டங்கள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய்  மூலம் அது சாத்தியமாகும். அதை இந்தியா முழுவதும் பார்க்கப் போகிறது. அப்போது நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும். எனவே, அனைவரும் முழு நம்பிக்கையுடன் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

Source link