சென்னை கோயம்பேடு அருகே கூவம் நதியை தூர்வாரும் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்விடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், பணிகள் தொடங்கிய பின்னர் நேரடியாக கூவம் நதிக்குள் இறங்கி கள ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் மற்றும் வெள்ளநீர் தடையின்றி வெளியேறுவதற்காக ஆகாயத்தாமரைகள், திடக்கழிவுகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள பாடிக்குப்பம் பகுதியில் கூவம் நதியை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீர்நிலைகளை சீரமைத்து, மழைநீர் மற்றும் வெள்ளநீர் தடையின்றி செல்லும் வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைக்கில் பயணம்
தொடக்க விழாவில் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் ஆனந்த் பூந்தமல்லி சாலையில் கார் மூலம் வந்தார். ஆனால், கடுமையானபோக்குவரத்துநெரிசல் ஏற்பட்டதால், அங்கு பணியில் இருந்த நீர்வளத்துறை ஊழியரின் இருசக்கர வாகனத்தில் நிகழ்விடத்துக்கு சென்றார். அமைச்சரின் இந்த நடவடிக்கை அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
பூஜையுடன் தொடங்கிய பணிகள்
அமைச்சர் வருகையைத் தொடர்ந்து, தூர்வாரும் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வழக்கப்படி பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிக்கப்பட்ட பின்னர், அமைச்சர் கொடியசைத்து கூவம் நதியை தூர்வாரும் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
கூவம் நதிக்குள் இறங்கி கள ஆய்வு
பணிகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அமைச்சர் ஆனந்த் ஹெல்மெட் அணிந்து நேரடியாக கூவம் நதிக்குள் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். தூர்வாரும் பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை பார்வையிட்ட அவர், பொக்லைன் இயந்திரங்களை இயக்கும் பணியாளர்களிடம் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் ஓடும் கூவம் நதியை சுத்தப்படுத்தும் பணிகளை நீர்வளத்துறையும், அரசு சார்பற்ற தன்னார்வ அமைப்புகளும்இணைந்துமேற்கொண்டு வருகின்றன. நதியின் நீரோட்டத்தை தடை செய்யும் ஆகாயத்தாமரைகள், மிதவை தாவரங்கள், செடி, கொடிகள் மற்றும் திடக்கழிவுகள் முழுமையாக அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழைநீர் தேங்காமல் வெளியேறும் திட்டம்
பாடிக்குப்பம் தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து தொடங்கியுள்ள இந்தப் பணிகள், பாடிக்குப்பம், சூளைமேடு, எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை வழியாக மழைநீர் மற்றும் வெள்ளநீர் தடையின்றி வெளியேறுவதற்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. பருவமழையை முன்னிட்டு சென்னை நகரில் நீர்நிலைகளை சீரமைக்கும் நடவடிக்கைகளில் இதுவும் முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது.
தவெகவில் சேர துடிக்கும் பெரும் தலைகள்! அடுத்து என்ன?
கவனம் பெறும் அமைச்சர்கள்
2026-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானோர் முதல் முறையாக அமைச்சர்களாகபொறுப்பேற்றுள்ளனர். நிர்வாக அனுபவம் குறைவாக இருந்தாலும், மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்துவது, திடீர் களப்பணிகளில் ஈடுபடுவது, சமூக வலைதளங்கள் வழியாக தங்களது செயல்பாடுகளை பகிர்வது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு தனி கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், “ரீல்ஸ் அரசு” என்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டாலும், அமைச்சர்கள் களத்தில் நேரடியாக செயல்படுவதை பலரும் வரவேற்று வருகின்றனர். மக்கள் தொடர்பை அதிகரிக்கும் வகையில் அமைச்சர்கள் செயல்படுவது, புதிய அரசின் நிர்வாக பாணியாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
Source link
