தடகளம்: உக்ரைன் வீராங்கனைக்கு தங்கம்

டோருன்: போலந்தில், உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் நேற்று துவங்கியது. உயரம் தாண்டுதலில், உக்ரைனின் யரோஸ்லாவா மஹுசிக் (2.01 மீ.,) முதலிடம் பிடித்தார். இம்முறை தங்கம் கைப்பற்றிய முதல் நட்சத்திரமானார் மஹுசிக். செர்பியாவின் ஏஞ்சலினா டோபிக், ஆஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ், உக்ரைனின் யூலியா லெவ்சென்கோ (தலா 1.99 மீ.,) வெள்ளி வென்றனர்.

ஸ்வியாடெக் அதிர்ச்சி

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், உலகின் ‘நம்பர்-3’ போலந்தின் இகா ஸ்வியாடெக், 50வது இடத்தில் உள்ள சகவீராங்கனை மாக்டா லினெட் மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 5-7, 3-6 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 5-7, 5-7 என, பிரிட்டனின் பிரான்செஸ்கா ஜோன்சிடம் வீழ்ந்தார்.

ஜப்பான்-ஆஸி., மோதல்

சிட்னி: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. சிட்னியில் நடக்கவுள்ள பைனலில் (மார்ச் 21) ஆஸ்திரேலியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் ஆஸ்திரேலியா வென்றால், 2வது முறையாக (2010, 2026) சாம்பியன் ஆகலாம். ஜப்பான் வெற்றி பெற்றால், 3வது முறையாக (2014, 2018, 2026) கோப்பை கைப்பற்றலாம்.

எக்ஸ்டிராஸ்

* கேரளாவின் மலப்புரத்தில் நடந்த ‘ஐ-லீக்’ கால்பந்து போட்டியில் கோகுலம் கேரளா அணி 2-0 என்ற கோல் கணக்கில் டெம்போ அணியை வீழ்த்தியது.

* மும்பையில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 2-6, 6-4, 6-7 என, பிரான்சின் புளோரென்ட் பாக்சிடம் தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் அலெக்சாண்டர் பிண்டா காயத்தால் பாதியில் விலகியதால், இந்தியாவின் சித்தார்த் ரவாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

* தாய்லாந்தில், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் (ஏப். 1-18) நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக 24 பேர் கொண்ட இந்திய அணியினர் நேற்று பாங்காக் சென்றனர். இந்திய அணி ‘சி’ பிரிவில் ஜப்பான் (ஏப். 2), ஆஸ்திரேலியா (ஏப். 5), சீனதைபே (ஏப். 8) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

* சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் 2வது சீசன் வரும் அக். 24ல் துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இத்தொடருக்கான பைனல் நவ. 14ல் நடக்கவுள்ளது. போட்டிகள் மும்பை, வதோதரா, விசாகப்பட்டனத்தில் நடக்கவுள்ளன.

* இந்துாரில் நடக்கும் சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், இரட்டையர் பைனலில் ரயில்வேயின் ஜீத் சந்திரா, அனிர்பன் கோஷ் ஜோடி 3-2 என, சகவீரர்களான ரோனித் பஞ்சா, பிரேயேஷ் ராஜ் ஜோடியை வீழ்த்தியது.

Source link