கோவை : தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கட்டட வரைபட அனுமதிக்கும், சொத்து வரி நிர்ணயிக்கவும் கட்சி நிதி கேட்பதால்,

கோவை : தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கட்டட வரைபட அனுமதிக்கும், சொத்து வரி நிர்ணயிக்கவும் கட்சி நிதி கேட்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கட்டடம் கட்டுவதற்கு சதுரடி பரப்புக்கு ஏற்ப, மாநகராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறையில் அனுமதி பெற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி இருக்கிறது. குடியிருப்புக்கு சதுரடிக்கு 15 ரூபாய் முதல் கட்சி நிதி செலுத்த வேண்டும்.

இதுதவிர, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தனியாக லஞ்சம் தர வேண்டும். லஞ்சம், கட்சி நிதி கொடுத்தால் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. கட்டுமான செலவோடு இதற்கென பல லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டியதுள்ளது.

பல லட்சம் ரூபாய் செலவழித்து, வரைபட அனுமதி வாங்கினாலும், சொத்து வரி விதிப்புக்கும் தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. அதனால் கட்சி நிதி கேட்க மாட்டார்கள் என, கட்டட உரிமையாளர்கள் நினைக்கின்றனர்.

மாறாக, மாநகராட்சியில் விண்ணப்பம் அளித்தால், கடந்த காலத்தில் கேட்டதை போல், இப்போதும் கட்சி நிதி கேட்டு, விண்ணப்பத்தை கிடப்பில் போடுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் சிலர் கூறியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை. அவர்களது அழுத்தம் அதிகாரிகளுக்கு வர வாய்ப்பு இல்லை. இருந்தாலும், இப்போதும் கட்சி நிதி கேட்கின்றனர்.

அமைச்சர்கள் பெயரை சொல்லி, அவர்களது ஆதரவாளர்கள் தொடர்ந்து வசூலிக்கிறார்களா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. கட்சி நிதி வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வரைபட அனுமதி, சொத்து வரி விதித்து புத்தகம் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Source link