2011-2016 ஆண்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் 27.90 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அறப்போர் இயக்கம் சார்பில் இந்த புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கத்தின் மகன்களின் கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தனர்.
அதே சமயம் கடந்த ஜனவரி 21ஆம் தேதி வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில் கடந்த 2024 ஆண்டும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி திமுக ஆட்சியில் வைத்தியலிங்கம் மீது பதியப்பட்ட இந்த வழக்கு பிப்ரவரி மாதத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. இதற்கான உத்தரவை அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்தச் சென்னை முதன்மை அமர்வு அனுமதி அளித்துள்ளது. அதோடு விசாரணையை முடித்து 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
