காவல் துறைக்கு புதிய டி.ஜி.பி., : சந்தீப்ராய் ரத்தோட்டுக்கு வாய்ப்பு

சென்னை : தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை நியமனம் செய்வதற்கு, ஏற்கனவே, தமிழக அரசு அனுப்பி இருந்த, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் அடிப்படையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன் பின், யு.பி.எஸ்.சி., சார்பில், தமிழக காவல் துறையின், ஆவின் டி.ஜி.பி., ராஜிவ் குமார், காவலர் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோட், மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள, மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டன.

இதற்கு, தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், தற்போது பொறுப்பு டி.ஜி.பி.,யாக உள்ள வெங்கடராமனையே, நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், யு.பி.எஸ்.சி., இறுதி செய்த மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளில் சந்தீப்ராய் ரத்தோட்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link