ஊதிய திருத்தம் மற்றும் இதர சேவை சார்ந்த சலுகைகள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்து நடத்தும் வகையில், தேசிய தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் மேலும் இரண்டு சுற்று பங்குதாரர் ஆலோசனைக் கூட்டங்களை 8ஆவது ஊதியக் குழு அறிவித்துள்ளது. ஊதியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் அமைந்துள்ள அல்லது பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச ஊழியர்களின் சங்கங்கள், கூட்டமைப்புகள் மற்றும் யூனியன்களின் பிரதிநிதிகளுடன் ஆகஸ்ட் 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டங்களின் போது, அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வு, படிகள், ஃபிட்மென்ட் காரணி, பதவி உயர்வு, பணி முன்னேற்றம் மற்றும் சேவை நிபந்தனைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஊழியர் அமைப்புகளுடன் 8ஆவது ஊதியக் குழு விவாதிக்கவிருக்கிறது. 8ஆவது ஊதியக் குழு சமீபத்தில் ஜூலை 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கொல்கத்தாவில் பல்வேறு பங்குதாரர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. அடுத்து டெல்லி கூட்டங்களைத் தொடர்ந்து, ஊதியக் குழு நாடு முழுவதும் தனது ஆலோசனையைத் தொடரும். அடுத்த சுற்று செப்டம்பர் 7, 8 தேதிகளில் சென்னையிலும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று புதுச்சேரியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31 வரை அவகாசம்!
தகுதியான சங்கங்கள் மற்றும் யூனியன்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் ஊதியக் குழுவை சந்திப்பதற்கான கோரிக்கையை விடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்களது குறிப்பாணையை (Memorandum) சமர்ப்பித்த அமைபுகளும், புதிய டெல்லி அல்லது எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் இதுவரை ஊதியக் குழுவைச் சந்திக்காத அமைப்புகளும் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று ஊதியக் குழு தெளிவுபடுத்தியுள்ளது. தகுதியான அமைப்புகள் தங்களது தனித்துவமான மெமோ ஐடியுடன் ஜூலை 31ஆம் தேதிக்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கான நேரமும் இடமும்!
இந்தக் கூட்டத்திற்கான இடமும் நேரமும் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று ஊதியக் குழு கூறியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் இந்தக் கூட்டங்கள் தற்போதைய ஆலோசனையின் ஒரு பகுதியே என்றும், வரும் மாதங்களில் டெல்லி மற்றும் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஊதியக் குழு தெரிவித்துள்ளது. டெல்லி-என்.சி.ஆர் பகுதிக்கு வெளியே உள்ள ஊழியர்களின் அமைப்புகள், தங்களது சொந்த மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது அருகில் உள்ள இடங்களில் ஊதியக் குழுவைச் சந்திப்பதற்கான நேரத்தை கோரலாம்.
ஊழியர்களின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
அமைச்சகங்கள், துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது ஆன்லைன் போர்டல் மூலம் ஊழியர்களின் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதற்கான கடைசித் தேதியை 8ஆவது ஊதியக் குழு ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. அதேபோல, அதிகாரப்பூர்வ போர்டல் மூலம் சமர்ப்பிக்கப்படும் தரவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஊதியக் குழு தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் அல்லது கடிதம் வழியாக அனுப்பப்படும் தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஊதியக் குழு தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஊதியக் குழுவுடன் உரையாட விரும்பும் மத்திய அரசு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் சங்கங்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் மூலம் சந்திப்பிற்கான கோரிக்கையை விடுக்கலாம். குறிப்பாணையைச் சமர்ப்பித்தபோது பெறப்பட்ட தனித்துவமான மெமோ ஐடியைப் பயன்படுத்தி இந்தக்கோரிக்கையை விடுக்க வேண்டும். சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் கூட்டங்களின் இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்னர் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று ஊதியக் குழு தெரிவித்துள்ளது.
Source link
